எழுத்தின் அளவு: அ+ அ- அ
கணவன் மனைவிக்கு இடையேயான தகராறில், ஏதும் அறியா பச்சிளங் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த குடிகார தந்தையின் வெறியாட்டத்துக்கு 8 மாத குழந்தையின் உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது. போதை தந்தையால் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட அவலத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு
தமிழகத்தில் மதுபோதையால் நடக்கும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவங்களும் பதைபதைக்க வைக்கும் அளவுக்கு அரங்கேறி வருகின்றன. அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது மதுரை மாவட்டம் சோழவந்தானில்...
சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் தென்னை மட்டை உறிக்கும் தொழில் செய்துவரும் 24 வயது விக்கி என்ற விக்னேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகசக்திக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் ஒன்றரை வயதில் கிசான் என்ற மகனும், 8 மாதத்தில் மிதன்யா ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
காதலால் ஒன்று சேர்ந்த இருவருக்கும் இடையே மதுபானம் என்ற அரக்கனால் நாளடைவில் மோதல் வெடிக்கத் தொடங்கியது. விக்னேஷ் மதுபோதையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் மதுபோதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வெறுத்துப் போன நாகசக்தி, குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு, பக்கத்தில் உள்ள பாட்டி காளியம்மாள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கும் அவர்களை நிம்மதியாக இருக்க விடாத விக்னேஷ், குடிபோதையில் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் பயந்து போன நாகசக்தி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள மற்றொரு வீட்டில் தஞ்சமடைந்தார்.
போதை ஒருபுறம், கோபம் மறுபுறம் என்று தன்னிலை மறந்த விக்னேஷ், மனைவி தஞ்சமடைந்த வீட்டிற்குள் புகுந்து, 8 மாத பச்சிளம் குழந்தையை தூக்கி வந்து ஈவுஇரக்கமின்றி சாலையில் வீசியுள்ளார்.
படுகாயம் அடைந்த குழந்தையை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷின் தாயார் இருளாயி, மது போதையால் ஒரு நிமிஷம் யோசிக்காமல் மகன் செய்த செயலால், குடும்பமே சின்னாபின்னமாகிப் போய்விட்டதாக அழுது புலம்பினார். இருளாயி, விக்னேஷின் தாயார்
குழந்தை இறந்ததை அடுத்து, விக்னேஷை போலீசார் கைது செய்தனர். குடிப்பழக்கத்தால் தமிழகத்தில் குடும்பங்கள் சீரழிந்து வருவதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது. பெற்ற குழந்தையை தந்தையே கொடூரமாக வீசி கொன்ற சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.