மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்... குணா குகையில் அத்துமீறிய செல்ஃபி பாய்ஸ் கைது...

எழுத்தின் அளவு: அ+ அ-

குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதியில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட மோகத்தால், அத்துமீறி நுழைந்த மூன்று பாய்ஸ்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துமீறிய 3 பாய்ஸ்களின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், உலக அளவில் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் வெளியானது மலையாள மொழி 'திரில்லர்' படமான “மஞ்சும்மல் பாய்ஸ்”. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் விழுந்து சிக்கிக் கொள்கிறார். அவரை மீட்க நண்பர்கள் போராடும் கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி இருந்தனர்.

இப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பெரும் வரவேற்பைப் பெற்று இதுவரை 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குணா குகையை கண்டு ரசித்துள்ளனர்.

இதனிடையே, படத்தில் நடந்தது போல் சில சம்பவங்கள் நடந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குணா குகைக்கு செல்லக்கூடிய பகுதி முழுவதுமாக, வனத்துறை சார்பாக மூடப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதன் பிறகு சுற்றுலா பயணிகளின் வசதி கருதி, குணா குகை அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, இயற்கை காட்சிகளை காண வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், தற்போது வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மோகத்தால், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பாரத் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் ஆகியோர், தடுப்புகளை கடந்து சென்று ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து குணா குகையில் தடை செய்யப்பட்ட பகுதியில், அத்துமீறி நுழைந்து செல்பி எடுத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். 

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கும் போதே படக்குழுவினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விட நீண்ட தூரம் சென்றதாக கூறி, வனத்துறையினர் பட குழுவினருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது ஆர்வக்கோளாறால் அத்துமீறும் நபர்களை கண்கொத்திப் பாம்பாக கவனித்து கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது வனத்துறை. படத்தைப் பார்த்து இடத்தைக் காண  வரும் சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. 

Night
Day