தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூரை சேர்ந்த போஷெட்டி என்பவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது மகளின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த சிறுமியின் பெற்றோர், கதவைத் தட்டி சிறுமியை மீட்க முயற்சித்தனர். ஆனால் போஷெட்டி கதவை திறக்காமல் தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாத பெற்றோர், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, போஷெட்டியின் வீட்டிற்கு தீ வைத்தனர்.
அதே நேரத்தில் அங்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர். அப்போது தாமதமாக வந்த போலீசார் மீது கடும் அதிருப்தி அடைந்த கிராம மக்கள், கற்கள், கட்டைகள் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவல் ஆய்வாளர் ஒரு உட்பட ஐந்து காவலர்கள் காயமடைந்தனர்.
மேலும் பொதுமக்கள் வைத்த தீயால் காயமடைந்த போஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.