எழுத்தின் அளவு: அ+ அ- அ
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பெண் மற்றும் 3 குழந்தைகள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனைவி மீதான சந்தேகத்தால் அவரது கணவர் இந்த கொடூரத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிருஷ்ணபுரத்தில் கணவரை பிரிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக தவமணி என்பவர் தனியாக வசித்து வந்தார். வித்ய தாரணி, அருள் பிரகாஷ், அருள்குமாரி ஆகிய மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த தவமணி, வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்பு நேற்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கணவன் அசோக்குமார் வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று காலை தவமணியை பார்க்க உறவினர்கள் வந்தபோது, வீட்டிலிருந்த அனைவரும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அருள் பிரகாஷ் மற்றும் வித்ய தாரணி என்ற இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தவமணி மற்றும் 10 வயதுடைய மகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் சிறிய காயத்துடன் இருந்த கணவர் அசோக்குமாரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், மனைவி மீதான சந்தேகத்தால் அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டு அரிவாளால் தாக்கியதாக வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.