எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பட்டியலின சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர், புல்லட் ஓட்டியதால் அவரது கையை மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பன்றிகளை விட மோசமாக நடத்துவதாக வெட்டுப்பட்ட மாணவனின் சகோதரர் வேதனை தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடவூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த அய்யாசாமி என்ற மாணவர் சிவகங்கையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
அய்யாசாமி குடும்பம் அந்த கிராமத்தில் பெரிய வீடு கட்டி சற்று வசதியாக வாழ்ந்து வந்தது, அதே கிராமத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகியோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது....
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அய்யாசாமியின் தந்தை பூமிநாதன் புதிதாக புல்லட் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய மறுநாளே மாற்று சமூகத்தை சேர்தவர்கள் அந்த பைக்கை அடித்து உடைத்ததாக தெரிகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ஊரில் வைத்து பேசி முடித்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை பூமிநாதனின் மகன் அய்யாசாமி கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகே மறைந்து இருந்த மாற்று சமூகத்தினர், தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்துக் கொண்டு நீயெல்லாம் எப்படி புல்லட் ஓட்டலாம் எனக் கூறி, அய்யாசாமியின் இரண்டு கைகளையும் வெட்டியதாக கூறப்படுகிறது....
இதில், படுகாயம் அடைந்த இளைஞர் அய்யாசாமி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மீண்டும் அய்யாசாமியின் வீட்டை மூவரும் அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வினோத், ஆதி ஈஸ்வரன் மற்றும் வல்லரசு ஆகிய மூன்று பேரையும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மாணவரின் சகோதரர் முனுசாமி, பட்டியல் இன சாதி எனக் கூறி தங்களை சாக்கடைகளில் கிடக்கும் பன்றிகளை விட மோசமாக நடத்துவதாகவும், தங்கள் வளர்ச்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் வேதனையுடன் கூறினார்.
தாங்கள் வீடு கட்டியது பிடிக்காமல் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்த வருடமே வீட்டை சூறையாடியதாகவும், தற்போது தனது மகன் ஊருக்குள் புல்லட் ஓட்டுவது பிடிக்காமல் அவனை வெட்டியதாகவும் கூறினார் பாதிக்கப்பட்ட மாணவன் அய்யாசாமியின் தாய் செல்லம்மாள்.
மாற்று சமூகத்தை சேர்ந்தவர்களால் பட்டியலின கல்லூரி மாணவனின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.