மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் - 5 பேர் காயம் - 6 பெண்கள் உட்பட 12 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை மணப்பெண்ணின் உறவினர்கள் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கி சூறையாடியதால் பரபரப்பு நிலவியது. தாக்குதலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு .

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மணப் பெண் குடும்பத்தினரால் சூறையாடப்பட்ட காட்சிகள் தான் இவை.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் மதன்குமார், உதயதாசாணி. பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் வியாழக் கிழமை நடைபெற்றது. 

திருமணம் முடிந்ததை அடுத்து, பாதுகாப்பு வழங்குமாறு, நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மணப்பெண் புகார் அளிப்பதாக இருந்தது. இதை அறிந்த மணப்பெண்ணின் குடும்பத்தினர், ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலைய பகுதிகளில் புது தம்பதியை தேடி அலைந்தபடி இருந்தனர்.

இதன் காரணமாக கட்சி அலுவலகத்திற்கு மணமக்களை வர வழைப்பதாகவும், அங்கு வைத்து புகார் அளிக்க வைப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரிடம் கூறினர். இதை அறிந்த மணப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் மார்க்சிட்ஸ் கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்களுடன் சாதி அமைப்பை சேர்ந்த ஒருவரும் ஆதரவாளர்களுடன் வந்துள்ளார். புதுமண தம்பதி அலுவலகத்தின் உள்ளே இருப்பதாக நினைத்து, ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தினுள் அதிரடியாக புகுந்த அவர்கள், ஒவ்வொரு அறையாக தேடினர்.

தங்கள் பிள்ளையை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறு கேட்டு போலீசாரிடம் கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரையில் உருண்டு புரண்டு அவர்கள் அழுது புலம்பியதால் கட்சி அலுவலகம் பெரும் களேபரமானது.

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கி மணமக்கள் இருக்கிறார்களா என்று தேடத் தொடங்கினர். 20-க்கும் மேற்பட்டோர் நடத்திய இந்த  தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த 5 பேர் காயமடைந்தனர்.

என்ன செய்வதென்று தெரியாமல், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டதை அங்கிருந்த போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல் மாறிய நிலையில், கட்சி அலுவலகத்தில் மணமக்கள் இல்லை என்பதை அறிந்த, சாதி அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பிரச்னை எல்லை மீற சம்பவ இடத்துக்கு அதிரடிப் படையினர் வந்த நிலையில், மணப் பெண்ணின் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக 6 பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்ய அந்த பகுதியில் பதற்றம் தணிந்தது. சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். சாதி மறுப்பு நடத்தி வைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day