எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருநெல்வேலி டவுன் பகுதியில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையில் தொடர்புடைய நூருன்னிஷா என்ற பெண் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். முன்னாள் காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். இந்தநிலையில் இவரை கடந்த 18ஆம் தேதி அதிகாலை, தெற்கு மவுன்ட் சாலை அருகே, மர்மகும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வக்பு வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலம் தொடர்பாக, ஜாகிர் உசேன் மற்றும் மற்றொரு தரப்பினருக்கு இடையில் இடத் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இடப்பிரச்சனைக்கான மோதலே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதனிடையே ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில், தச்சநல்லூர் பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா ஆகியோர் போலீசில் சரணடைந்தனர்.
மேலும், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த முகமது தௌபிக்கை காலில் துப்பாக்கிச் சூடு நடத்தி போலீசார் கைது செய்தனர்.
ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கில், முகமது தௌபிக், அவரது தம்பி கார்த்திக், தௌபிக் மனைவி நூருன்னிஷாவின் சகோதரா்கள் அக்பர் ஷா மற்றும் பீர்முகமது, அவர்களது உறவினரான 17 வயது சிறுவன் என இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜாகிர் உசேனை கொலை செய்ய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
நூருன்னிஷா கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அவரை கைது செய்ய, தனிப்படை போலீசார், கேரளாவில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை நூருன்னிஷா கைது செய்யப்படாமல் இருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜாகிர் உசேன் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆடியோ வெளியிட்டதுடன், காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரது புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் படுகொலை நிகழ்ந்திருக்காது என்பதால், உயிரிழந்த ஜாகிர் உசேனின் உறவினர்கள் போலீசார் மீது அதிருப்தியில் உள்ளனர். முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி கொலை வழக்கு திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.