எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை டவுன் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி படுகொலை தொடர்பாக டவுன் காவல் நிலைய ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆணையர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.
நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் நிலத்தகராறில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தௌஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜாகிர் உசேன் மீது பொய் வழக்குபதிவு செய்த நெல்லை டவுன் உதவி ஆணையர் செந்தில்குமார், டவுன் காவல்நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜாகிர் உசேன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி, துணை ஆணையர் கீதா ஆகியோர் ஜாகிர் உசேன் குடும்பத்தினரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்ததை தொடர்ந்து ஜாகின் உசேன் உடலை வாங்க அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து டவுன் காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ள நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனி, காவல் உதவி ஆணையர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்யவும் பரிந்துரை செய்துள்ளார்.