மோசடி உறுதியானால் முத்தூட் உரிமம் ரத்து - மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முத்தூட் நிறுவனம், நகை அடகு திட்டத்தில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மோசடி செய்தது உறுதியாகும் பட்சத்தில் முத்தூட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

10 சவரன் நகைகளை அடகு வைத்தால் கூடுதல் வட்டி தருவதாகவும், 10 ஆயிரம் ரூபாய் போனஸ் தருவதாகவும் கூறி, முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்தினர் மோசடி செய்ததாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலையைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகார்களின்பேரில் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்திற்கு ஏஜெண்டுகளாக செயல்பட்ட வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி, முத்தூட் நிறுவன மேலாளர்கள் இளவரசன், இமானுவேல், முத்தூட் நிறுவன ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் மீது கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முத்தமிழ் செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளதுரை, காளீஸ்வரி ஆகிய 4 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி, அவர்களின் நகைகளை பெற்று மோசடி செய்வதாக முத்தூட் நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல காவல்துறை தலைவர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கானது, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தென்மண்டல ஐ.ஜி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் முத்தூட் நிதி நிறுவனத்தினர் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள்,  மாதந்தோறும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களின் ஏராளமான நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

முத்தூட் நிதி நிறுவன கிளைகள் தொடர்புடைய 7 வழக்குகளில் 3 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் 2 வழக்கு, தூத்துக்குடியில் 2 வழக்கு, தென்காசியில் 3 வழக்கு என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பா.நம்பிசெல்வன், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் நகைகளை மோசடி செய்த வழக்கின் அடிப்படையில் முத்தூட் நிதிநிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதுபோல பல்வேறு மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தினர் ஏராளமான நகைகளை மோசடி செய்திருப்பதாகவும், ஓய்வு பெற்ற போலீசாரும் இந்த மோசடிக்கு துணையாக இருந்ததாகவும் தெரித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அப்பாவி பொதுமக்களின் நகைகளை பெற்று முத்தூட் பினான்ஸ் மற்றும் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, முத்தூட் நிதி நிறுவனத்தின் மீதான மோசடியில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.? அவர்கள் அளித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? முத்தூட் நிதி நிறுவனத்தினருடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தவர்கள் யார்? யார்,? என்ற விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரம்பிற்கு கீழ் வரும் மாவட்டங்களில் முத்தூட் நிறுவனத்தின் மோசடி குறித்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து விசாரணை நடத்தி, அதில் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தால் முத்தூட் நிறுவனத்திற்கான உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்குகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து போலீசார் ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

varient
Night
Day