எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை வளசரவாக்கத்தில் திமுக வட்டச் செயலாளரும், பெண் கவுன்சிலரும் சாலையில் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னை கேட்காமல் எப்படி நிகழ்ச்சி நடத்தலாம் என ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய வட்ட செயலாளரும், அரசு நிகழ்ச்சிக்கு உன்னிடம் சொல்லத்தேவையில்லை என பெண் கவுசிலரும் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்...
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில், 152 வது வார்டில் புதிதாக பள்ளி கட்டிடம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. கடந்த 12 ஆம் தேதி இந்த கட்டடங்கள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு, விழா ஏற்பாடுக்கான பணிகள் மற்றும் விடுபட்ட சிறு பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது அங்கு வந்த திமுக 152 வது வட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, யாரை கேட்டு இந்த பணியை செய்கிறீர்கள்.. வட்டச்செயலாளரான தன்னிடம் கூறாமல் எப்படி நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் எனக்கூறி அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி வேலையை நிறுத்தி உள்ளார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு நைடியுடன் வந்த 152 ஆவது வார்டு பெண் கவுன்சிலர் பாரதி, வேலையை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வட்டச் செயலாளரான தன்னை கேட்காமல் எந்த பணியும் நடத்தக் கூடாது என சத்தியமூர்த்தி கூறியதோடு, பெண் கவுன்சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த கவுன்சிலர் பாரதி, இது கட்சி பணி கிடையாது, அரசு பணி, எனவே உங்களுக்கு சொல்லத் தேவையில்லை என்றும் எதுவானாலும் எம்.எல்.ஏவிடம் கேட்டுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். இதனால் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவருக்கும் வாக்குவாதம் முன்றிய நிலையில், ஆத்திரமடைந்த, வட்டச் செயலாளரோ, ஆபாச வார்த்தைகளால் பெண் கவுன்சிலரை வசைபாடியதோடு, தனது பதவியை வாங்கிக்கொண்டு சுற்றி வருகிறாய் என்றும், பிச்சை எடுத்து வந்த நீ தற்போது கவுன்சிலராக ஆகி உள்ளாய் என்றும் கூறியதோடு, ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
சற்றும் சளைக்காமல் மல்லுக்கட்டிய பெண் கவுன்சிலர் பாரதி, வளசரவாக்கம் காவல் நிலையத்தில், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
யார் பெரியவர் என அங்காங்கே திமுக நிவாகிகள் அடித்துக்கொள்ளும் நிலையில், திமுக வட்ட செயலாளரால் தனது உயிருக்கு ஆபத்து என திமுக பெண் கவுன்சிலரே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றால், சாதாரண பெண்களுக்கு விளம்பர திமுக அரசு ஆட்சியில் எந்த அளவிற்கு பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.