ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் - காவல்துறை விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், திருவேங்கடம் முதல் ஆளாக ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதற்கான புதிய சிசிடிவி ஆதாரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் ரவுடி திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

பெரம்பூரில் கடந்த 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திருவேங்கடம், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் அருள், வினோத், சந்தோஷ், கோகுல், விஜய் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் அருள் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது‌. இவர் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் என்பதும், சுரேஷின் வழக்குகளையும் கையாண்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது‌.

கைது செய்யப்பட்ட 11 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுக்க செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது காணொளி வழியாக நடைபெற்ற விசாரணையில், 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 11 பேரிடமும் செம்பியம் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் அவர்கள் அளித்த தகவலின்பேரில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் என்ற நபரை போலீசார் மாதவரம் வெஜ்டேரியன் நகர பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர் போலீசாரை தாக்க முயன்றதாகவும், இதனால் பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி திருவேங்கடத்தை இரண்டு ரவுண்டுகள் சுட்டதாகவும், அதில் அவரது வலதுகை தோள்பட்டை, நெஞ்சில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அங்கேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்திலும், அவர்கள் ஆயுதங்கள் பதுக்க வைத்திருந்த இடத்திலும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர், சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்களையும், நாட்டு வெடி குண்டுகளையும் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், ஆர்ம்ஸ்ட்ரங்கை முதல் ஆளாக திருவேங்கடம் வெட்டும் ஆதராங்களுடன் கூடிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன்பு திருவேங்கடம் மூலமாகவே ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கொலை நடந்த அன்று இவர் மூலமாகவே எடுத்துவரப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Night
Day