எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுர ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய புகாரில், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதலில் இந்த வழக்கில் திமுக ஒன்றிய செயலாளரும் சேர்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக, அவருக்கு இதில் தொடர்பில்லை என மடாதிபதியின் சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு...
மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுர ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக கும்பல் ஒன்று மிரட்டல் விடுக்க தொடங்கியுள்ளது.... கடந்த ஆறு மாதங்களாகவே அரசியல்வாதிகள், ரவுடிகள் என பலரும் தருமபுர ஆதீன மடத்தை மிரட்டியதாகவும் தெரிகிறது. அடுத்தடுத்து மிரட்டல் வர, தருமபுர ஆதின மட நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது. இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சார்ந்த வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர், தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆபாச வீடியோவை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க, பல கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்று கூறியதுடன், தம்மை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்கள் என்ற பகீர் குற்றச்சாட்டையும் தனது புகாரில் விருத்தகிரி குறிப்பிட்டுள்ளார். திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தங்கள் சார்பில் தொடர்பு கொள்வார் என மிரட்டிவிட்டு சென்றதாக புகாரில் கூறிய விருத்தகிரி, செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாரதிய ஜனதா கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த. விஜயகுமார் ஆகியோர் மிரட்டல் கும்பலை பின்னால் இருந்து இயக்குவதாக கூறி இருந்தார்.
இது மிகப்பெரிய விவகாரம் எனக்கருதிய மயிலாடுதுறை டி.எஸ்.பி., மேலதிரிகளுக்கு புகார் விவகாரங்களை பாஸ் செய்துள்ளார். உடனடியாக ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை கையாளும் சிறப்பு பிரிவிடம், ரகசியமாக இந்த விவகாரத்தை கையாள மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது. துரிதமாக விசாரணையில் களமிறங்கிய சிறப்பு பிரிவு போலீசார், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மிரட்டிய ஆடுதுறை வினோத், திருவெண்காடு ரவுடி விக்னேஷ், கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ், ஆகியோரை கொத்தாக கைது செய்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திமுக ஒன்றிய செயலாளருக்கு ஆதரவாக மடாதிபதியின் சகோதரர் காவல்துறைக்கு கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல் சம்பவத்தில் மடத்திற்கு ஆதரவாக திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் செயல்பட்டார் எனவும், காவல்துறை உதவியை நாடும்படி ஆலோசனை வழங்கியது விஜயகுமார் தான் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மடாதிபதி சகோதரர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் தருமபுரம் ஆதினத்தின் உதவியாளர் செந்தில் பெயர் பதட்டத்தில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் உண்மை என்பதை ஆதீன தரப்பு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இந்த திடீர் பல்டிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.