ரூ.50 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி... திமுக பிரமுகர் அராஜகம்... பாதிக்கப்பட்டவர் கதறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் திமுக முன்னாள் கவுன்சிலர் போலி ஆவணம் தயார் செய்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, பாதிக்கப்பட்ட நபர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட கோரிமேடு தெருவில் வசித்து வந்த அப்துல்ரகுமான், முகமது காசிம் சகோதரர்களுக்கு, திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள சமுத்திரம் பகுதியில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 ஏக்கர் 18 சென்ட் நிலம் கூட்டு பட்டாவாக இருந்தது. அப்துல்ரகுமானுக்கு 9 வாரிசுகள் இருந்த நிலையில், அதில் 2 பேர் திருமணமாகாமலே இறந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த 1943ஆம் ஆண்டு அப்துல்ரகுமான் அவரது மனைவி மரியம்பீ ஆகியோர் உயிரிழந்த நிலையில், அப்துல் ரகுமானின் சகோதரர் முகமதுகாசிமும் உயிரிழந்தார். இதனிடையே, அப்துல்ரகுமானின் ஏழு பிள்ளைகள் உயிருடன் இருக்கும் போதே, முகமதுகாசிமின் மகன்கள் கூட்டாக இருந்த குடும்ப பத்திரத்தை மறைத்து 1948-ஆம் ஆண்டு பொய்யான போலி ஆவணம் தயார் செய்ததாக கூறப்படுகிறது.


50 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை அபகரிக்கும் நோக்கில் திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் திமுக கவுன்சிலர் பன்சாதிக் உதவியுடன் போலி ஆவணம் தயாரித்து பல்வேறு இடஞ்சல்களை செய்து வந்ததாகவும் தெரிகிறது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியோடு கடந்த ஜனவரி மாதம் அனைவரது இடத்தையும் ஒன்று சேர்த்து பட்டா பெயர் மாற்றமும் செய்துள்ளனர்.

இது குறித்து பலமுறை வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்துல்ரகுமான் குடும்பத்தினர் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது, 70 வயதான சதாம் என்ற முதியவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மிரட்டி அபகரிக்கும் நோக்கில் உறவினர்கள் செயல்பட்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சதாம் வேதனையுடன் கூறினார்.

அப்துல் ரகுமானுக்கு சொந்தமான இடத்தில் தாங்கள் வேலி போட்டு வைத்திருந்ததாகவும், முன்னாள் திமுக கவுன்சிலர் பன்சாதிக் உதவியுடன் முகமதுகாசிம் குடும்பத்தினர் அந்த இடத்தை போலி பத்திரம் மூலம் கிரயம் செய்து விட்டதாகவும் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். முன்னாள் திமுக கவுன்சிலர் போலி ஆவணம் தயார் செய்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வரும் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day