எழுத்தின் அளவு: அ+ அ- அ
விபத்துக்குள்ளான கார் தீப்பற்றி எரிந்ததில் உணவக உரிமையாளர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரின் ஸ்டேரிங் லாக் ஆனதால் உணவக உரிமையாளருக்கு நேர்ந்த துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வெளியில் செல்லும்போது தொலைபேசியில் சார்ஜ் உள்ளதா என சரி பார்க்கும் பலரும், நம்மை கொண்டு செல்லும் வாகனம் சரியாக உள்ளதா என பார்ப்பதில்லை... அவ்வாறு சரிபார்க்காமல் சென்ற வாகனம் தீப்பற்றி எரிந்ததில் உணவக உரிமையாளர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது அரியலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.
ஆண்டிமடம் பகுதியில் வசித்து வந்த அன்பழகன் என்பவர் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். சிறிய கடையாக இருந்த தனது உணவகத்தை, விடாமுயற்சியால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பெரிய ஓட்டலாக உருவாக்கியுள்ளார் அன்பழகன். கடையின் உரிமையாளராக இருந்தாலும் ஊழியர்களை போன்று காலையிலேயே உணவகத்துக்கு செல்லும் வழக்கம் உடையவராக இருந்துள்ளார் அன்பழகன். இந்நிலையில், வழக்கம்போல் உணவகத்துக்கு செல்ல முற்பட்ட அன்பழகன், தன்னுடைய காரில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயங்கர சத்தம் ஒன்று காரில் இருந்து கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை பொருட்படுத்தாமல் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலையில் உள்ள தனது உணவகத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார் அன்பழகன்...
அப்போது எதிர்பாராத விதமாக காரின் HAND LOCK ஆனதால் சாலையின் தடுப்பு மீது கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அன்பழகன் காரிலேயே மயக்கமடைந்த நிலையில், காரிலிருந்து பெட்ரோல் லீக் ஆகி தீப்பற்றியதாக தெரிகிறது.
இதனைக்கண்ட பொதுமக்கள், காரின் கண்ணாடியை உடைத்து அன்பழகனை மீட்க போராடினர். இருப்பினும் காரின் அனைத்து கதவுகளும் சிஸ்டம் லாக் ஆனதாலும், மளமளவென தீப்பற்றி எரிந்ததாலும் அன்பழகனை மீட்கும் முடியாமல் போனது மிகவும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்த நிலையில், அன்பழகனை சடலமாகவே மீட்க முடிந்தது. வாகனங்களை அவ்வப்போது பராமரித்து சரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவருக்கும் இந்த விபத்து உணர்த்தும் பாடம்.