எழுத்தின் அளவு: அ+ அ- அ
விழுப்புரம் மாவட்டம் டி.குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் பரபரப்பு ஓயாத நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்லத்தில் பாக்கெட் சாராய விற்பனை படுஜோராக நடைபெற்றுள்ளது. இதனை குடித்த அதே கிராமத்தை சேர்ந்த முருகன், சிவச்சந்திரன் ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களோடு சாராயம் குடித்த ஜெயராமன் என்பவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்திலேயே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் சாராய புழக்கம் சற்றுகூட குறையவில்லை என்பதற்கு சான்றாக அடுத்தடுத்து வீடியோ காட்சிகள் வெளியாகி வருகிறது. நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக வெற்று அறிவிப்புகளை மட்டுமே காவல்துறை வெளியிடுவதாகவும், விழுப்புரம் மாவட்ட காவல்துறை முற்றிலும் செயலிழந்து உண்மை சம்பவங்களை மூடி மறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.