எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்திலும், அவருடைய மருமகனும் விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் சென்னை வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை முடித்து வைத்த கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவை துடியலூரில் உள்ள மார்டினின் வீடு, அலுவலகம், அவருக்குச் சொந்தமான ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டினின் மருமகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.