எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, தாயின் சிகிச்சைக்காக வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை ஏமாந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நிகழ்ந்துள்ளது. தற்போது, வீட்டை இழந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடியில் தாயுடன் தஞ்சமடைந்த தனயனின் பரிதாப நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
ஆட்டோ ஓட்டுநரின் வறுமையை பயன்படுத்தி பணமோசடி செய்யப்பட்ட நிலையில், அவர் தனது மாற்றுத்திறனாளி தாயுடன் நீர்தேக்க தொட்டியின் கீழே தஞ்சமடைந்துள்ள பரிதாப காட்சிதான் இவை.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளடியான்விளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ரஞ்சிதா ராணி. இவருடைய கணவர் ராஜேந்திரன் கட்டபொம்மன், போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த ரஞ்சிதாராணி, மகன் ராபட் ரசல்ராஜுடன் வசித்து வந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், வெளிநாட்டில் 5 ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, சொந்தமாக வீடு கட்டியுள்ளார். பின்னர் சொந்த ஊருக்கே திரும்பிய ராபட் ரசல்ராஜ், ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் தாய்க்கு உடல் நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். மருத்துவ செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் புதிதாக கட்டிய வீட்டையும் 18 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார் ராபட் ரசல்ராஜ். இவரிடம் செலவு பணம் போக 6 லட்சம் ரூபாய் கையில் இருப்பதை அறிந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சகாய ஆஞ்சலின் என்பவர், அதிக வட்டி தருவதாகக்கூறி 6 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார்.
நம்பிக்கையின் பெயரிலேயே பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் பணம் கொடுத்ததாகக் கூறிய ராபட் ரசல்ராஜ், சொத்தை விற்று பணத்தை கொடுத்து விடுகிறேன் என்ற சகாய ஆஞ்சலின், தற்போது சொத்தை விற்றுவிட்டு தலைமறைவானதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.
பணத்தையும் வீட்டையும் இழந்த ராபட் ரசல்ராஜ், வாடகை வீடு கேட்டு சென்றபோது வயதான தாய் எங்கள் வீட்டில் இருப்பதா? எனக்கூறி பலரும் வீடு கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த ஆட்டோ ஓட்டுநர், 5 நாட்களுக்கும் மேலாக தனது மாற்றுத்திறனாளி தாயுடன் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு கீழே தஞ்சமடைந்துள்ளார்.
பணமோசடி குறித்து காவல்துறை மற்றும் முதல்வர் சிறப்பு முகாமில் மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ள ராபட் ரசல்ராஜ், பணமோசடி செய்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.