எழுத்தின் அளவு: அ+ அ- அ
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல திரைப்பட இயக்குநர் அமீரை ஏப்ரல் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கில் அமீருக்கு சம்மன் அளிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விரிவாக காணலாம்...
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்திய வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாஃபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கைது செய்தனர். போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்ததில், அவர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, கென்யா உள்ளிட்ட சில ஆப்ரிக்க நாடுகள் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகம் செய்தது தெரியவந்தது.
மேலும், இவரது கூட்டாளியான சதா என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான சென்னையிலுள்ள குடோன் மற்றும் வீட்டை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு சீல் வைத்தனர். மேலும், ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் சலீம் மற்றும் மைதீன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் தொழில் ரீதியான நண்பர்களான அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாபர் சாதிக் சமீபத்தில் உணவுபொருள் தொடர்பான மூன்று நிறுவனங்களை தொடங்கியிருப்பதும், அந்த நிறுவனங்களை ஜாபர் சாதிக், இயக்குநர் அமீர், சையது இப்ராஹிம் ஆகியோர் தனித்தனியாக நிர்வகித்து வந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் 'சிறப்புக் குழு' அமைத்து சோதனை மேற்கொள்ளவும், சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும், ஜாபர் சாதிக்கின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து சைபர் கிரைம் ஆய்வு மேற்கொள்ளவும், தலைமறைவானவர்களை கண்டறியவும், ஜாபர் சாதிக் தொடங்கிய மூன்று நிறுவனங்கள் குறித்த விவரங்களை திரட்டவும் என தனித்தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தை இயக்குபவரும், தொழில் பார்ட்னருமான இயக்குனர் அமீர், தனக்கு சம்மன் அளிக்கப்பட்டது குறித்து தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த விசாரணையை எதிர்கொள்ள எப்போதுமே தான் தயாராக உள்ளதாகவும், கொஞ்சமும் தயக்கமில்லாமல் தனது தரப்பில் இருக்கும் உண்மையையும், நியாயத்தையும் எடுத்துச் சொல்லி நூறு சதவீத வெற்றியோடு வருவேன் எனக் கூறியதோடு, இறைவன் மிகப்பெரியவன் என தனது பட தலைப்போடு விளக்கத்தை முடித்துள்ளார்...
போதை பொருள் கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக்குடன் தொழில் பார்ட்னராக இணைந்துள்ள இயக்குநர் அமீரை நேரில் ஆஜராகுமாறு மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளது தேர்தல் பரபரப்பையும் மிஞ்சும் அளவிற்கு உள்ளது.