எழுத்தின் அளவு: அ+ அ- அ
பள்ளி தோழனுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, பெற்ற குழந்தைகளுக்கு தாயே உணவில் விஷம் வைத்து துள்ளத்துடிக்க கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன்னுடைய சுயநலத்துக்காக ஏதுமறியாத பிஞ்சுகளை காவு வாங்கிய தாயின் கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜிதா. காவலாளியாக வேலை பார்க்கும் சென்னையா என்பவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி இறந்த காரணத்தால், ரஜிதாவை 12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் படித்த பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜிதா கலந்துகொண்டுள்ளார். அப்போது ரஜிதாவுக்கு தன்னுடைய பள்ளித் தோழன் சிவக்குமாருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு மெல்ல காதலாக மாறி, அது திருமணத்தை கடந்த உறவாக அவதாரம் எடுத்துள்ளது.

தங்களை இளம் ஜோடிப்புறாக்களாக எண்ணி இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக ஊர் சுற்றுவது, லாட்ஜ்களில் ரூம் எடுத்து தங்குவது என வாழ்க்கையை உல்லாசமாக கழித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிவகுமாரிடம் கேட்டுள்ளார் ரஜிதா. இங்கிருந்து தான் கதையின் முதல் பிளாட் ஆரம்பிக்கத் துவங்குகிறது.
ரஜிதா கேட்டக்கேள்வி சிவகுமாரின் மண்டையை போட்டு குடையவே, ரஜிதாவின் வாயை அடைப்பதற்காக, உனது குழந்தைகளையும், கணவனையும் விட்டு வா, திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார் சிவகுமார். இதைக்கேட்டு ரஜிதா அதிர்ந்து போவார் என சிவக்குமார் ஒரு கணக்கு போட, அதற்கு மாறாக ரஜிதா போட்ட கணக்கோ கொடூரமாக இருந்துள்ளது.

போட்ட திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கடந்த 27ம் தேதி தனது மூன்று குழந்தைகளான சாய் கிருஷ்ணா, மது பிரியா, கௌதம் ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்த தயிரை ஊற்றி சாப்பிட கொடுத்திருக்கிறார் ரஜிதா. கணவன் சென்னையாவுக்கும் அதே தயிர் சாப்பாட்டை கொடுத்தநிலையில், தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வெளியே கிளம்பி உள்ளார் சென்னையா.
மீண்டும் வீட்டுக்கு வந்த கணவன் சிவகுமாரிடம், தனக்கும் குழந்தைகளுக்கும் வயிறு வலிப்பதாக கூறி, தனது நாடகத்தை அரங்கேற்றுகிறாள் ரஜிதா. மனைவியின் நடிப்பில் மதி மயங்கிப்போன சென்னையா, ரஜிதாவையும், 3 குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் அதற்குள், எதையும் அறியாமல் அம்மா தருகிறாள் என்று நம்பி, உணவை சாப்பிட்ட அந்த 3 இளம் குழந்தைகளும் துள்ளத்துடிக்க இறந்து போனது.

மனைவியையாவது காப்பாற்றலாம் என எண்ணி ரஜிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சென்னையா. இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தேக மரணங்கள் என்று முதலில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். அதன்படி, போலீசாருக்கு சென்னையா மீது சந்தேக பார்வை வலுக்க ஆரம்பித்தது. பின் நாட்கள் செல்ல செல்ல விசாரணை சூடுபிடிக்க துவங்கியது. விசாரணையில், ரஜிதா பயன்படுத்திய செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, தனது பள்ளித்தோழன் சிவகுமாருடன் ரஜிதா தொலைபேசியில் தொடர்பில் இருந்தது அம்பலமானது.
உடனடியாக ரஜிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, காதலன் சிவக்குமாருடன் தொலைபேசியில் பேச ஆரம்பித்ததில் இருந்து, அவருடன் சேர்ந்து வசிக்க சதி திட்டம் தீட்டி குழந்தைகளுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்தது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புக் கொண்டார் ரஜிதா. இந்தநிலையில் வீட்டில் இறந்து கிடந்த 3 பிஞ்சுகளின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலுடன் உல்லாசமாக இருந்தது மட்டுமல்லாமல், அந்த உல்லாசம் தினம் தினம் வேண்டும் என்பதற்காக ஒன்றும் அறியாக இளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய ரஜிதாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.