எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெற்ற மகனால் அடித்து துரத்தப்பட்ட முதியவர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் தஞ்சமடைந்துள்ளார். செல்வ செழிப்போடு வாழ்ந்த முதியவர் பெற்ற மகனால் அடித்துவிரட்டப்பட்ட சம்பவம் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
50 ஆண்டுகளுக்கு முன் 200 ஏக்கர் நிலத்திற்கு சொந்தகாரரும், அரண்மனை வாழ்க்கை வாழ்ந்த இவர்தான், தற்போது பெற்ற பிள்ளையால் அடித்து துரத்தப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழர் சமூகத்தில் கூட்டுக்குடும்பம் என்பது வாழ்வியல் முறைகளில் ஒன்றாகவே இருந்து வந்த நிலையில், வீட்டில் உள்ள முதியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். பின்னர் பல்வேறு காரணங்களை காரணம் காட்டி, சுதந்திரமாய் இருக்க தனி குடும்பம், தனி வீடு என மாறிய சமூகத்தில் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், நாகநாத பாண்டியன் என்ற முதியவர் பெற்ற பிள்ளையால் விரட்டப்பட்ட நிலையில், வாழ வழியின்றி, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தை அனுகி உள்ளார்.
ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட நாகநாத பாண்டியன் சென்னையில் வசித்து வந்துள்ளார். அசோக் லேலாண்ட் நிறுவனத்தில் பதினாறு ஆண்டுகள் பணியாற்றியதோடு, தொழிற்சங்க தலைவராகவும் இருந்த அவர், விருப்ப ஓய்வு பெற்ற பிறகு தனியாக தொழில் தொடங்கி நடத்தி வந்ததாகவும், தனது மகனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் படிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மதுவிற்கு அடிமையான இவரது மகன் தன்னை வீட்டைவிட்டு துரத்தி விட்டதாகவும், தனது மனைவி மற்றும் சகோதரிகளையும் வீட்டை விட்டு துரத்தியதால் அவர்கள் தற்பொழுது ஒசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளதாகவும் வேதனையுடன் கூறுகிறார்.
தனது மகன் திருமணத்திற்கு பின் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாகவும், அங்கு பல கொடுமைகளை அனுபவித்ததாகவும் நாகநாத பாண்டியன் கூறியுள்ளார். முதியோர் இல்லத்தில் 40 பேர் சாப்பிட்ட தட்டுக்களை கழுவ சொன்னதாகவும், வயதான காலத்தில் தன்னால் அது முடியவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் இருந்து வெளியேறிய பின், காவல்துறையில் உயர் பதவியில் உள்ள தனது தங்கை மகன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கி இருந்ததாகவும், பின்னர் அவர், தன்னை மீண்டும் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தற்போது ஏழ்மை காரணமாக வயதான காலத்தில் யாருடைய அரவணைப்பும் இல்லாத முதியவர் நாகநாத பாண்டியன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் 200 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், தற்போது, இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை திருவெற்றியூரில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வரும் தனது மகன் நன்கு சம்பாதித்து வரும் நிலையிலும் தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார். இனி தனது மகன் தன்னை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறும் முதியவர், ஏற்கனவே கடந்த வருடம் வீட்டில் இருந்தபோது நாற்காலியால் தன்னை தாக்கியதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது, மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாயையை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
வயது மூப்பால் தவித்து வரும் நிலையில், தங்குவதற்கு ஒரு இடம் ஏற்பாடு செய்தால் போதும் எனத் தெரிவித்த முதியவர், தான் ஒரு பேச்சாளர் என்றும், எனவே யாருடைய உதவியும் இன்றி எனது வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ள முடியும் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்ட அவர், தனக்கு 79 வயது ஆவதாகவும், இந்த வயதில் யாரும் உயிரோடு வாழ கூடாது எனவும், வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும் கூறி கண்ணீர் வடித்தது காண்போரை கண்கலங்கச் செய்தது.
தனக்கென சேர்த்து வைக்காமல், தங்கள் பிள்ளைகளுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த பல பெற்றோர்களுக்கு தற்போது இந்த நிலைமைதான் உள்ளது. மனிதனாய் பிறந்த அனைவருக்கும் முதுமை வரும் என்பதை கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த பெற்றோரை கைவிடாமல், அவர்களை அரவணைத்து காப்பாற்றுவது தங்கள் கடமை என்பதை பெற்ற பிள்ளைகள் உணர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.