எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் MY V3 ads நிறுவனத்தின் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விளம்பரங்களை பார்த்தால் காசு தருவதாகக் கூறி தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கணோர் எப்படி திரண்டார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.
விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட மை வி3 நிறுவனத்திற்கு ஆதரவாக கூடிய கூட்டத்தின் காட்சிகள் தான் இவை.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு My v3 Ads என்ற செயலியை சக்தியானந்தன் என்பவர் நடத்தி வருகிறார். யூடியூப்பில் அந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. அதில், தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி அந்த செயலில் உறுப்பினராக சேர முடியும் என கூறப்பட்டுள்ளது. உறுப்பினரான பின்னர் செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலமாக நாள்தோறும் 5 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். விளம்பரம் பார்ப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரம் செய்த அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார். அந்த, புகாரின் பேரில் மை வி3 Ads மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு செய்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திடீரென கோவை - நீலம்பூர் பைபாஸ் சாலையில் ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, மை வி3 Ads நிறுவன உரிமையாளர் சத்யானந்தன் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கிருந்தவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினார். ஆனால், திடீரென பல்லாயிரக்கணக்கனோர் ஒன்று கூடியது எப்படி என்றும், வாட்ஸ் அப் மூலம் இவரே வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளித்து வரவழைத்து விட்டு போலீசார் மூலம் நடகமாடியதாக பலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, இருகூர் வி.ஏ.ஓ ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது போக்குவரத்துக்கு இடையூறு, பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
MLM முறையில் நடைபெறும் மோசடியை சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர் நட்ராஜ், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சொன்ன கேளுங்க.. அப்புறம் உங்க இஷ்டம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
மை வி3 நிறுவனத்திற்கு ஆதரவாக கூடிய கூட்டத்தில் பெரும்பாலானோர் பாமர மக்களே என்றும், அதிகளவில் வருமானம் ஈட்டலாமென ஆசை வார்த்தைகளை கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுபோன்ற, மோசடி வளையில் யாரும் சிக்காமல் இருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.