எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவால் காலமானார். சிரிப்பால் மக்கள் மனதில் இடம்பெற்ற சேஷூ குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சபா" என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தமிழ் சின்னத்திரையில் பிரபலமாகி, பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சேஷூ என்ற லட்சுமி நாராயணன். தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களை கவர்ந்த சேஷூ, 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சேஷூ, கடைசியாக 'வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேஷூ நடித்து வந்தார். A1 திரைப்படத்தில் அச்சச்சோ இவரா, இவரு பயங்கரமான ஆளாச்சே என நடிகர் சேஷூ பேசிய வசனம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை மேற்கொண்ட சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா-பாகிஸ்தான், திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் கொரொனா காலகட்டத்தில் சமூக வலைதளம் மூலமாக நிதி திரட்டியதுடன், தன்னால் இயன்ற அளவு பணத்தை கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். கொரோனா காலகட்டத்தில் நோய் பரவாமால் தடுக்க, இரு சக்கர வாகனத்தில் மைக் பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கெல்லாம் மேலாக, ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை தன்னுடைய கடமையாகவே மேற்கொண்டு அதை செயல்படுத்தி வந்துள்ளார் சேஷூ. தன்னால் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டி ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வதாகவும், நடிகர்கள் சந்தானம், யோகி பாபு போன்ற பிற நடிகர்களிடமும் உதவி கேட்டு இந்த நற்செயலை செய்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஒரு வருடத்தில் பத்து திருமணத்தை ஆவது நடத்தி வைக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை எனவும், கூடிய விரைவில் கண்டிப்பாக செய்வேன் எனவும் சேஷூ பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இப்படி நகைச்சுவை நடிப்பாலும், உதவும் மனப்பான்மையாலும் மக்கள் பலரையும் தன்வசப்படுத்திய நடிகர் சேஷூ, கடந்த 15-ம் தேதி மாரடைப்பு மற்றும் இதர உடல்நலக் குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, சேஷூவின் மருத்துவ சிகிச்சைக்கு 10 லட்சம் வரை தேவைப்படுவதாகவும், அதற்காக நிதி அளித்து உதவுமாறும் பிக் பாஸ் அமுதவாணன் உள்ளிட்டோர் வீடியோ வெளியிட்டு இருந்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வேறு வழியின்றி திங்கட்கிழமை நடிகர் சேஷூ வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நண்பகல் நடிகர் சேஷூ தனது உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்று விண்ணுலகம் நோக்கி புறப்பட்டார்.
நடிப்பால் பலரையும் சிரிக்க வைத்தவர் இன்று பலரை அழவைத்துவிட்டு சென்றதாக நகைச்சுவை நடிகர் ஜீவா உள்ளிட்டோர் சேஷூவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் நடிகர் சேஷூ எனவும், அவரது மறைவு மிகுந்த வருத்தமளிப்பதாகவும் லொள்ளுசபா மாறன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எளிய மக்களுக்கு நடிகர் சேஷூ செய்த உதவிகள் என்றைக்கும் மறையாது.