எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகை சனம் ஷெட்டி மனு அளித்தார். தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளதாகவும், பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளதாக சனம் ஷெட்டி, கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என பெண்களுக்கு எதிராக அடுத்தடுத்து இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனை கண்டு திடீரென பொங்கி எழுந்த நடிகை சனம் ஷெட்டி, கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி சம்பவங்களை கண்டித்து நவீன நங்கையர் பவுண்டேஷன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த வாரத்தில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டாலும் தற்போது வரை, அதற்கு தீர்ப்பு கிடைக்காமல் உள்ளதாகவும், அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஆதங்கம் தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக‘ தெரிவித்த அவர் காவல்துறையின் உதவி இல்லாமல் இந்த போராட்டத்தை நடத்த முடியாது என்றும், இந்த பிரச்னைக்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மலையாள திரை உலகில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்த ஹேமா கமிட்டிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தமிழ் திரையுலகிலும் பாலியல் ரீதியான அத்துமீறல்கள் உள்ளன என்றும், பட வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லும் நிலை தமிழ் திரையுலகிலும் உள்ளது என பெரும் குண்டை தூக்கி போட்டார் சனம் ஷெட்டி.
தனக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்து ஃபோன் செய்யும்போதெல்லாம், "செருப்பால் அடிப்பேன் நாயே" என திட்டிவிட்டு போனை கட் செய்து விடுவேன் என்றும் தெரிவித்தார். அட்ஜெஸ்மென்ட் செய்தால் தான் பிராஜெக்ட் கிடைக்கும் என பலர் தன்னை வற்புறுத்தியபோதெல்லாம், நான் அவர்களது தொடர்பை துண்டித்து விடுவேன் என்றும் அவர்களிடம் சென்று சிக்கிக் கொள்ளமாட்டேன் என்றும் கூறினார் சனம் ஷெட்டி.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் இந்த பட வாய்ப்பு கிடைக்கும் என யாராவது கூறினால், காரி துப்பி விட்டு வெளியே சென்று விடுங்கள் அந்த படமே வேண்டாம், என்றும் பெண்களுக்கு அறிவுரை கூறினார் சனம் ஷெட்டி.
நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று கூறி அதிர்வலையை ஏற்படுத்தினார்.
வாரம் இருமுறை தனக்கு பாலியல் தொல்லை அளித்து சிலர், போன் செய்வதாக தெரிவித்த அவர், பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசும் பெண்களின் பேச்சை அலட்சியப்படுத்தாமல் அவர்களுடன் சேர்ந்து உரிமைக்காக போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.