ஒரு மதம் மக்களை வெறுக்க வைக்கும், ஒரு பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும் - நடிகர் அஜித்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரு மதம் மக்களை வெறுக்க வைக்கும், ஒரு பயணம் உங்களை நல்ல மனிதனாக்கும் என நடிகர் அஜித்குமார் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சினிமாவை தாண்டி கார் ரேஸ், ஏரோனாட்டிகல், சமையல், ட்ராவல் என பல சுவாரசியமானவைகளில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் நாடு முழுவதும் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பைக் பயணம் மேற்கொண்ட அவர், அடுத்ததாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில்தான், பைக் பயணம் கற்றுத்தரும் பாடம், அனுபவம் உள்ளிட்டவை குறித்து அஜித் பேசியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது. அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், மதம் நீங்கள் இதுவரை சந்திக்காத மக்கள் மீது வெறுப்பை தூண்டும் என்ற வாசகம் உண்டு.. அது உண்மைதான்.. மதம், சாதி, எதுவாக இருந்தாலும் சரி, மனிதர்களை சந்திக்காத முன்பே வெறுப்பை ஏற்படுத்தும் என்று பேசியுள்ளார். மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் ஒரு கணிப்பில் இருப்போம், அவர்களை சந்தித்த பிறகுதான் அவர்களின் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியும் என கூறியுள்ளார்.

மக்கள் பயணம் செய்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஏனென்றால் தன்னைப் பொருத்தவரை, பயணமும் ஒரு வகை கல்விதான் என கூறியுள்ள அஜித்குமார், பயணத்தின்போது வெவ்வேறு நாடு, மத, மொழியின மக்களை சந்தித்ததாகவும், அவர்களின் கலாசாரத்தை அனுபவித்ததுடன் அவர்களுடன் நெருங்கி பழகியதாகவும் தெரிவித்துள்ளார். 

பயணங்கள் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் மீதும் அதிக அன்பைப் பொழியச் செய்யும் என்றும், பயணங்கள் உங்களை மென்மேலும் சிறந்த மனிதனாக மாற்றும் என்றும் பேசியுள்ளார்.

ஒரு பயணம் சாதி மத பேச்சுக்களை தகர்த்து அனைவரிடமும் நெருங்கி பழக உதவுகிறது என்றும், மதம், இனத்தை தாண்டி மக்களை நேசிக்க வைக்கக் கூடியது பயணங்கள் என்றும், பயணங்களே நல்ல பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கின்றன என்றும் அந்த வீடியோவில் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பயணங்கள் ஒரு சாதரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும் என்றும் நடிகர் அஜித்குமார் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அஜித் பேசியுள்ள அந்த வீடியோ இணையத்தையே ஆக்கிரமித்துள்ளது. 622 நாட்களுக்கு பிறகு நடிகர் அஜித்தின் குரலில் வெளியாகி உள்ள வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Night
Day