எழுத்தின் அளவு: அ+ அ- அ
கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா குற்றம் சாட்டியுள்ளார்.
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் குறித்து வெளியீட்டிற்கு முன் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 14-ம் தேதி படம் வெளியான நிலையில், கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. இது சூர்யா தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், கங்குவா படத்தின் சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதாகவும், ஆனால் முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் படம் எனக் கூறியுள்ளார்.
பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் என அறிவுக்கு மாறாக எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அளவிற்கு விமர்சனங்கள் வரவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான எதிர்மறை விமர்சனங்கள் வியப்பளிப்பதாகவும் நடிகை ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். படத்தின் 2-ம் பாதியில் பெண்களின் ஆக்சன் காட்சியையும், கங்குவாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பு, துரோகம் போன்ற காட்சிகளையும் சுட்டிக் காட்டியுள்ள அவர், விமர்சகர்கள் நல்ல விஷயங்களை சொல்ல மறந்து விட்டதாக ஆதங்கப்பட்டுள்ளார்.
படத்தை 3-டியில் உருவாக்க படக்குழு எடுத்த முயற்சிக்கு பாராட்டு கிடைக்க வேண்டிய நிலையில், படத்தின் முதல் காட்சி முடிவதற்கு முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிப்பதாகவும் நடிகை ஜோதிகா கூறியுள்ளார். எதிர்மறை கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேறு எதுவும் செய்யவில்லை என்றும் ஜோதிகா சாடியுள்ளார்.