தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து... முறிந்தது 18 ஆண்டுகால பந்தம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நட்சத்திர தம்பதியின் 18 ஆண்டு கால தாம்பத்தியம் முடிவுக்கு வந்தது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

அண்மைக் காலமாக தமிழ் திரை பிரபலங்களின் விவாகரத்து நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினரின் விவாகரத்து கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து காதலில் விழுந்தார் ஐஸ்வர்யா. தனுசும் ஐஸ்வர்யாவை நேசிக்க இரு குடும்பத்தார் சம்மதத்துடன் 2004 நவம்பர் 18 ஆம் தேதி இனிதே திருமணம் நடந்தது. காதல் திருமண வாழ்க்கைக்கு அத்தாட்சியாக தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர். 

நடிகர் தனுஷின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா மிகவும் உறுதுணையாக இருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான த்ரீ திரைப்படத்தில் இருந்து வெளிவந்த "ஒய் திஸ் கொலவெறி" பாடல் மூலம் நடிகர் தனுஷ் உலகம் முழுவதும் பிரபலமானார். இதன் மூலம் ஹிந்தியில் ராஞ்சனா என்ற திரைப்படத்திலும், அதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கால்பதித்து க்ளோபல் ஸ்டாராக உருவெடுத்தார் .

இந்தநிலையில்தான் இருமகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினி தம்பதி, கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் பிரிந்து விட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. ஒருபக்கம் உட்ச நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, மறுபக்கம் கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கிய நடிகர் தனுஷின் இந்த பிரிவிற்கு விதவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன. 

குறிப்பாக, தனுஷ் குடும்பத்தினரை ரஜினிகாந்த்  குடும்பத்தினர் மதிக்கவில்லை என்றும் இதன் காரணமாகவே ஐஸ்வர்யாவை பிரியும் முடிவுக்கு தனுஷ் வந்தாகவும் கூறப்பட்டது.  

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையிலான பிரச்சனையை சுமூகமாக தீர்க்க  குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்த நிலையில், முதலில் ஆறு மாத காலம் இருவருக்கும் அவகாசம் வழங்கி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இருவரும் ஆஜராகததால் விசாரணை 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 21-ம் தேதி  தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராகி, விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். 

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், அதனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என ஒரு தரப்பும், திருமணம் என்பது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே, விருப்பமில்லாத வாழ்க்கையை முறித்துக்கொள்வதே சிறந்தது என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது. ஆனால், பிரிவதற்கு முன் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சம்மந்தப்பட்ட தம்பதி நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதே சமானியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day