புஷ்பா 2 திரைப்படத்தை காண சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் அவருடைய பவுன்சர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால், ஏராளமானோர் அங்கு திரண்டனர். இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். இதில், 35 வயது மதிக்கத்தக்க ரேவதி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், அனுமதியின்றி சிறப்புக் காட்சி திரையிட்ட சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் குழு மீது சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சந்தியா திரையரங்க உரிமையாளர் மேலாளர் துணை மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் அவருடைய பவுன்சர்கள் ஆகியோர் இன்று அதிரடி கைது செய்யப்பட்டனர். சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அல்லு அர்ஜூன் அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே அல்லு அர்ஜூன் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.