பாலியல் புகாருக்கு உள்ளானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று மலையாள நடிகரும், கேரள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா-வின் முன்னாள் தலைவருமான மோகன் லால் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாலியல் புகார் தொடர்பாக மவுனம் கலைத்த அவர், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்த நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை அண்மையில் அம்மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் நடிகைகளுக்கு அளிக்கும் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மலையாள திரையுலகை உலுக்கியுள்ள இந்த அறிக்கையை அடுத்து, முன்னணி நடிகர் மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்த வந்த மோகன்லால், இன்று மவுனம் கலைத்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்பதாகவும், அறிக்கையை வெளியிட்ட அரசின் முடிவு சரியானது என்றும் கூறினார். தான் எங்கும் ஓடிய ஒளியவில்லை என்றும், கேரளாவில் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள புகார்கள் நடந்திருக்கலாம் என்றும், கேரள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும் சூழ்நிலையில், அம்மா சங்கத்தை மட்டும் விமர்சிப்பது சரியல்ல என்றும் அனைத்து கேள்விகளுக்கும் அம்மா சங்கம் மட்டும் எப்படி பதில் சொல்லும் என்றும் அவர் கூறினார்.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும் என்றும் மோகன்லால் கூறினார். இந்த விவகாரத்தில் அரசும், நீதிமன்றமும் தங்களுடைய கடமையை செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், நீதிமன்றத்தில் உள்ள விஷயம் குறித்து தான் எப்படி பேச முடியும் என்று கூறினார். பாலியல் புகாரால் கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறிய மோகன்லால், பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். மோகன்லாலின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.