எழுத்தின் அளவு: அ+ அ- அ
உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு செரிமான பிரச்சனை, அடிவயிற்றில் வீக்கம், நெஞ்சுவலி தொடர்பாக ரஜினியின் உடலில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அடிவயிற்றில் உள்ள ஒரு ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ரஜினிக்கு வயிற்று வலி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகத்தான் அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டது என்பதை சிடி ஸ்கேன் மூலமும், ரத்தம் மற்றும் சீறுநீரக மூலம் பல்வேறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் வயது மூப்பின் காரணமாக, அவரை , ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்டு ஹெப் கேத்லேப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறிப்பாக, அடிவயிற்றில் உள்ள ஒரு ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை "டிரான்ஸ்கேதீட்டர் எண்டோவாஸ்குலர் அயோர்டிக் பழுதுபார்ப்பு என்ற செயல்முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ரஜினிக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், 2 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நடிகர் ரஜினிகாந்த், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.