நடிகைகளே உஷார்... கேரவனில் ரகசிய கேமரா... - ராதிகா...

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் ஹேமா கமிட்டியின் அறிக்கை  வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடித்தாக  பிரபல தமிழ் நடிகை  ராதிகா குற்றஞ்சாட்டியுள்ளார் . திரையுலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ள நடிகை ராதிகாவின் குற்றச்சாட்டு குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கும்பல் ஒன்றால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசால் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.  இதில்,  மூத்த நடிகை சாரதா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கேபி வல்சலா குமாரி ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

ஹேமா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியான சூழலில்,  அதில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கேரள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது . மலையாள திரை உலகில் நடந்த  பல பாலியல் சீண்டல்கள்  வெளி உலகத்திற்கு தெரியவந்தன . இதன் எதிரொலியாக சில நடிகர்கள், இயக்குநர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.மேலும், கேரள நடிகர்  சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். 

இந்த நிலையில்  பாலியல் வன்முறைகள் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகத்திலும் உள்ளதாக நடிகை ராதிகா பகிரங்க குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். பெண்கள் விரும்பி காதலிப்பது என்பது வேறு  என்றும், ஆனால் பட வாய்ப்புக்காக அவர்களை நிர்பந்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேரளாவில் நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் தொந்தரவு குறித்து பெண்கள் தான் குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், ஆண் நடிகர்கள் யாரும் வாய் திறக்கவே இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

மலையாள படப்பிடிப்பு ஒன்றில் தான் பங்கேற்றபோது,   அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அதுகுறித்து விசாரித்தபோது, கேரவனில் ரகசிய கேமிரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து அந்த காட்சிகளை  கண்டு ரசித்துக்கொண்டிருந்தது தெரியவந்ததாகவும் கூறினார். இதனால் பயந்து போன தான், கேரவனுக்கு செல்லாமல் ஓட்டலுக்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.  மேலும்,  கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பின் எல்லா நடிகைகளிடமும் கேரவனுக்குள் செல்லும் போது ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். கேரவன் வந்திருப்பது நல்ல விஷயம் என்று நினைக்கும் போது அதுக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சில நடிகைகள் தங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என கூறுவதாகவும், ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

ராதிகாவின் குற்றச்சாட்டு  திரை உலகில் மீண்டும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விவரங்களை சேகரிக்க  சிறப்பு விசாரணை குழு அமைக்கவும்  திட்டமிட்டுள்ளது. நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள், சீண்டல்கள் குறித்து அடுக்கடுக்காக வெளிவரும் குற்றச்சாட்டுகளால்,   சம்மந்தப்பட்ட நடிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

Night
Day