பாலியல் புகாரில் சிக்கினார் பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

படப்பிடிப்பின்போது பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் ஹேமா கமிட்டி அளித்த அறிக்கை, ஒட்டுமொத்த மலையாள திரைத்துறையையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் ஏராளமான மலையாள நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மலையாள நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா  மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் மீது அளிக்கப்பட்டுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்த ஜானி மாஸ்டர், நடிகர் தனுஷ் நடித்த மாரி-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ரவுடி பேபி', புட்ட பொம்மா, காவாலா, அரபிக் குத்து என பல்வேறு பிரபலமான பாடல்களில் நடன இயக்குனராக பணியாற்றிய ஜானி மாஸ்டருக்கு, தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக, சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது. 

இந்த விருதிற்காக ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த ஜானி மாஸ்டர் மீது, தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஜானி மாஸ்டருடன் கடந்த சில மாதங்களாக 21 வயது இளம்பெண் ஒருவர் நடனகலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவர், ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 

அதில் மும்பை, ஹைதராபாத், சென்னை என பல்வேறு இடங்களுக்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது, ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒரு கட்டத்தில் ஹைதராபாத்தில் தான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜானி மாஸ்டர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கில், ஜானி மாஸ்டருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட, மேகம் கருக்காதா பாடலில் ஜானி மாஸ்டருன் இணைந்து பணியாற்றிய சக நடன இயக்குநர் சதீஷும், ஜானி மாஸ்டர் மீது புகாரளித்திருந்தார். படப்பிடிப்பின்போது பெண் நடன கலைஞர்களுக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதை தடுக்க வேண்டுமெனவும் சதீஷ் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் ஜானி மாஸ்டர் மீது சக பெண் நடனக்கலைஞர் அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

அதன் விளைவாக, ஜனசேனா கட்சியில் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளார் கட்சித் தலைவரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண். இவை ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மேகம் கருக்காதா பாடலுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது திரும்ப பெறப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

varient
Night
Day