எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல தமிழ் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், டேனியல் பாலாஜியின் மறைவு தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் சகோதரரான டேனியல் பாலாஜி, தமிழில் ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நடிகர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரளச் செய்த அவர், பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களிலும் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரானார். தமிழில் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி, சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், டேனியல் பாலாஜி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்து, தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜியுடன் வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் பவன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து, டேனியல் பாலாஜியின் உடல் இன்று மாலை ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.