மஞ்சும்மல் பாய்ஸுக்கு புதிய சிக்கல்... தயாரிப்பாளர்கள் மீது பண மோசடி புகார்...

எழுத்தின் அளவு: அ+ அ-

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பளர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக இந்த திடீர் வழக்கு பதிவு? யாரால் வழக்கு போடப்பட்டது என்பதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மலையாள சினிமா என்றாலே குறைந்த பொருட்செலவில் உருவாகி, அதற்கேற்ற வசூலை மட்டுமே ஈட்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வேரூன்றி உள்ளது. இந்த எண்ணத்தை முற்றிலுமாக தவிடுபொடியாக்கி முழுக்க முழுக்க புது முகங்களை மட்டுமே வைத்து குறைந்த பொருட்செலவில், உருவாகி, மொழி தாண்டி, கடல் தாண்டி, கண்டம் தாண்டி எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து பிரம்மாண்ட வசூலை படைத்தது தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்.

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில் செளபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி, காலித் ரஹ்மான், உள்ளிட்டோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்தனர். கொடைக்கனலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சர்வைவல் ட்ராமாக உருவான இத்திரைப்படத்தை செளபின் ஷாஹிர், பாபு ஷாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் தயாரித்தனர். 

வெளியான ஆரம்பத்தில் திரைப்படம் ஆள் அரவமற்று இருந்தது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் வாய் வார்த்தையின் மூலமாகவே படத்திற்கு ப்ரொமோஷன் செய்தனர். அதன்படி உலகம் முழுதும் உள்ள அனைத்து திரையரங்களையும் ஆக்கிரமித்த இத்திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூலித்து மலையாள திரையுலகின் மைல்கல்லாக மாறியது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற கமலஹாசனின் கண்மணி அன்போடு காதலன் பாடலை காணவே ஒரு கூட்டம் படத்திற்கு சென்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

படத்தை பார்த்த கடைகோடி ரசிகனில் இருந்து உச்ச பட்ச நட்சத்திரங்கள் வரை எல்லோரும் படக்குழுவை பாராட்டி சிறப்பித்த நிலையில், தற்போது படத்திற்கு புது சிக்கல் பிறந்துள்ளது. அதன்படி படத்தின் தயாரிப்பாளர்களான செளபின் ஷாஹிர், பாபு ஷாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மீது பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படட்ட மனுவில், அரூரை சேர்ந்த சிராஜ் வலியத்தர ஹமீது என்பவர் படத்தில் 7 கோடி முதலீடு செய்ததாகவும், படத்தின் லாபத்தில் 40 சதவீத பணத்தை அளிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், படத்தின் லாபம் அல்லாது முதலீட்டை கூட தராமல் தாயாரிப்பாளர்கள், தன்னை ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தது. மேலும் தற்போது OTT பிளாட்ஃபார்ம் உரிமத்தில் விற்கப்பட்ட ரூ.20 கோடி ரூபாய் பணத்தின் பங்கையும் தாராமல் ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி, செளபின் ஷாஹிரின் பரவா ஃபில்ம்ஸ் நிறுவனம் மற்றும் ஷான் ஆண்டனியின் வங்கு கணக்குகளை முடக்கியதோடு தயாரிப்பாளர்கள்  3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் செளபின் ஷாஹிர், பாபு ஷாஹிர், ஷான் ஆண்டனி ஆகிய 3 பேர் மீதும் பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டார்.

எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி வெளியாகி எல்லா தரப்பு மக்களையும் உற்சாக படுத்திய இத்திரைப்படம் ஒருவருக்கு மட்டும் சிக்கலாகி போன சம்பவம் ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day