எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் தனது 80வது வயதில் உடல்நலக்குறைவால் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
1944ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சி ரவிபுரத்தில் அரச குடும்பத்தில் ராஜா ரவிவர்ம கொச்சனியன் தம்புரானுக்கு, 3வது மகனாக பிறந்தவர் ஜெயசந்திரன். பிரபல பின்னணி பாடகரான இவர் மலையாளத்தில், பிரபல பாடகர்களான தேவராஜன், பாபுராஜ் ஆகியோர்களுடனும், தமிழில் இளையராஜா உள்ளிட்ட பிரபல பாடகர்களுடனும் பல்வேறு திரைபடங்களில் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக இவர் தமிழில் வைதேகி காத்திருந்தாள், மூன்று முடிச்சு, பாபா உட்பட பல பிரபல திரை படங்களில் பாடல்களை பாடியுள்ளார். 1986ல் சிறந்த பின்னணி பாடருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதேபோல் கேரளா ,தமிழக திரைத்துறை விருதுகளையும் பெற்றுள்ளார். மலையாளம் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல பாடல்களை பாடியவர் ஜெயசந்திரன். 1973ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த லலிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட ஜெயசந்திரனுக்கு லெட்சமி என்ற மகளும், தீனநாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நோய்வாய்பட்டு கடந்த சில நாட்களாக திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும், பின்னணி பாடகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.