எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் காலமான செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனி முத்திரை பதித்த பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷின் திரையுலக பயணம் குறித்து காணலாம்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் டெல்லி கணேஷ். படித்துவிட்டு, 1964 முதல் 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில், தலைநகர் டெல்லியில் பணியாற்றிய அவர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பணியை துறந்தார். 1977ம் ஆண்டு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அவரது இயற்பெயர் கணேசன்.. ஆனால் தான் அறிமுகம் செய்யும் நடிகர்களுக்கு சினிமாவுக்கென ஒரு பெயரை சூட்டுவது பாலச்சந்தரின் வழக்கம். இதனால், சினிமாவில் கணேஷை அறிமுகப்படுத்தும் போது சினிமாவுக்காக தனிப் பெயர் ஒன்றை வைத்துக் கொள் என சொல்லிருக்கிறார் பாலச்சந்தர். என்ன பெயர் வைப்பது என்று குழம்பித் தவித்த நிலையில், டெல்லியில் அதிக நாடகங்களில் நடித்திருந்ததால் கணேஷ் உடன் டெல்லியையும் சேர்த்து டெல்லி கணேஷ் என பெயர்சூட்டினார் கே.பாலச்சந்தர். இப்படி டெல்லி கணேஷாக மாறிய அவர், எந்தப் படத்தில் நடித்தாலும், எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அதில் எவரையும் இமிடேட் செய்யாமல் நடிப்பது அவரின் பலமாக அமைந்தது என்றே கூறலாம்.
டெளரி கல்யாணம், சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி என பாலசந்தர் பல படங்களில் கொடுத்த அற்புத கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார் டெல்லி கணேஷ். சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த மிருதங்க குருமூர்த்தி கதாபாத்திரம் ரசிகர்களால் மறக்கவே முடியாதது. இதேபோல், ‘நாயகன்’ படத்தையும் யாராரும் மறக்க முடியாது. இப்படத்தில் வேலுநாயக்கர் கமலின் நண்பராக ஐயர் கேரக்டரில் வாழ்ந்திருப்பார் டெல்லி கணேஷ்.
நகைச்சுவை, குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ், முதல் முறையாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் பிரான்சிஸ் கதாபாத்திரம் மூலம் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தனது 47 ஆண்டுகால திரைப் பயணத்தில் மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக வலம்வந்தார் டெல்லி கணேஷ்.
கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கிய டெல்லி கணேஷின் பயணம் கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், அஜித், விஜய் காலம் வரை தொடர்ந்தது.
1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களிலும், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் 1977ஆம் ஆண்டு அறிமுகமான டெல்லி கணேஷ் உயிரிழக்கும் வரையிலும் திரைத்துறையில் நடித்து வந்தார். அவரது மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகத்தான நடிகரான டெல்லி கணேஷ் மறைந்தாலும், அவர் நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் மறக்க முடியாத நினைவுகளாக பார்வையாளர்களின் நினைவுகளில் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.