எழுத்தின் அளவு: அ+ அ- அ
நம்பிக்கை என்ற நூலை வைத்து, மலையைக் கட்டி இழுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட Society of the Snow திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பனி சூழ்ந்த மலைத் தொடரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்குகிறது. அந்த விபத்தில் தப்பித்த சிலர், இறந்து போனவர்களின் உடல் உறுப்புகளை சாப்பிட்டு 72 நாட்கள் உயிர் பிழைத்த உண்மை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Roll Pkg
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த பிறகு கடைசியாக மிஞ்சி இருக்கும் ஒன்று நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையும், முயற்சியும் என்னவெல்லாம் அதிசயங்களை நிகழ்த்தும் என்பதற்கு உதாரணமாக நிகழ்ந்த ஒன்று தான், உருகுவே விமான விபத்துக்கு பிந்தைய சம்பவம். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அன்று ரக்ஃபி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 45 பேருடன், தனி விமானம் ஒன்று சிலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
பனி படர்ந்த ஆண்டிஸ் மலைத் தொடருக்கு மேலே பறந்து கொண்டிருந்த அந்த விமானம், அனுபவம் இல்லாத ஒரு விமான ஓட்டியால் விபத்தில் சிக்குகிறது. இரண்டு துண்டுகளாக விமானம் உடைந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். மீதம் உயிருடன் இருந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். உதவிக்கு யாராவது வருவார்கள் என்று காத்திருந்த கண்கள், பூத்துப் போகத் தொடங்குகின்றன. விமானம் விபத்தில் சிக்கிய இடத்தைக் கண்டறிய முடியாமல் மீட்புக் குழு திணறுகிறது.
நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சாகத் தொடங்குகிறது. உயிர் பிழைத்தவர்களில் ஒரு சிலரை, பசியும், மைனஸ் டிகிரி குளிரும் காவு வாங்கிக் கொண்டே வருகிறது. தப்பிக்கலாம் என நினைத்து மலைப் பகுதிகளை நோக்கி நடந்து சென்றால் இரவில் உடல் உறைந்து பனிக்கட்டியாகி விடும். வேறு வழியே இல்லை. யாராவது மீட்டாக வேண்டும். ஆனால், மோசமான வானிலை மற்றும் பனிப்புயல் காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்படுகின்றன. பசியைத் தீர்த்துக் கொள்ள, இறந்து போன மனித சடலங்களை தவிர வேறு வழியில்லை. சடலங்களில் உள்ள உடல் உறுப்புகளை அறுத்து உண்டு, கொஞ்ச பேர் உயிருடன் உள்ளனர்.
இறுதியாக உயிரை பணயம் வைத்தாவது மலைத் தொடரை தாண்டி செல்ல வேண்டும் என முடிவெடுக்கும் நண்டோ பராடோ மற்றும் ராபர்டோ கனேசா ஆகிய இருவரும், எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் 15 ஆயிரத்து 260 அடி உயர மலைச் சிகரத்தைத் தாண்டி, 61 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கின்றனர். 10 நாட்கள் முயற்சிக்குப் பிறகு ஒரு நகரத்தை அடையும் அவர்கள் இருவரும் கடைசியாக தங்களுடன் கொண்டு வந்திருந்தது அவர்கள் வழியில் உண்பதற்காக கொண்டு வந்திருந்த சக மனிதர்களுடைய உடல் உறுப்புகளின் எச்சங்களைத் தான்.
சாவின் விளிம்புக்குச் சென்று மீண்டு வந்த அந்த இருவரும் கொடுத்த தகவலின் பேரில் டிசம்பர் 23ஆம் தேதி மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, விமான விபத்தில் எஞ்சி இருந்த 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆண்டிஸ் மலைத் தொடர் விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்களை, இன்று உருகுவே நாடு, ஹீரோக்களாக கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், அனைத்தையும் இழந்த பிறகும் கூட, அவர்கள் நம்பிக்கையுடன் போராடி அனைத்து கடினமான சூழ்ல்களையும் எதிர்கொண்டு மீண்டு வந்ததால் தான். இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட Society of the Snow என்ற ஸ்பெயின் மொழித் திரைப்படம் தான் தற்போது ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் திரைப்படம் மற்றும் ஒப்பனை ஆகிய இரு பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிர் பிழைத்தவர்களின் உணர்வுகளை அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக அந்தப் படத்தின் இயக்குநர் ஜுவான் அன்டோனியோ கார்சியா பயோனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.