ரஜினி என்னும் அதிசயப்பிறவி

எழுத்தின் அளவு: அ+ அ-

1975ல் பாலச்சந்தரால் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிக்கு அப்போது தெரிந்திருக்குமோ தெரிந்திருக்காதோ பின்னாளில் இந்த தமிழக மக்கள் தன்னை உச்சத்தில் வைத்து கொண்டாட போகிறார்கள் என்று. சிறுசு முதல் பெருசு வரை, பியூட்டிஸ் முதல் பாட்டிஸ் வரை அனைவரையும் தன்னுடைய வசீகர நடிப்பின் மூலம் காந்தமாக இழுத்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவை ரஜினிக்கு முன், ரஜினிக்கு பின் என எளிதாக பிரிக்கலாம். ஏனென்றால் ரஜினிக்கு முன்பு வரை ஒரு நாயகன் என்றால் வெள்ளை தோலுடன், வாட்ட சாட்டமாக, அழகான வசீகர முகத்துடன் இருக்க வேண்டும் என்ற பிம்பம் இருந்தது. அந்த பிம்பத்தை எல்லாம் தவிடு பொடியாக்கி தன் எதார்த்த நடிப்பாலும், ஸ்டைலாலும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் "யாருடா இந்த பையன்" என திரும்பி பார்க்க வைத்ததும் ஒரு அதிசயம் தான்.

அதேபோன்று ரஜினியின் காலகட்டத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகமான அத்தனை நடிகர்களிலும் ரஜினியின் சாயல் நிச்சயம் இருக்கும். விஜய் அஜித்தில் தொடங்கி தற்போது உள்ள ஹரிஷ், அசோக் வரை தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு 'அதிசய பிறவி' தான் ரஜினிகாந்த்.

பாலிவுட் சினிமாவை நாம் வியந்து பார்த்தது ஒரு கால கட்டமாக இருந்தாலும், இன்று உச்சத்தில் இருக்கும்  பாலிவுட் நடிகர்களையே தன்னை "தலைவா" என்று அழைக்க வைத்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் ரஜினிகாந்த். 

தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி, 100 கோடி, 200 கோடி, 500 கோடி என்ற மைல்கல்களை தன்னுடைய படங்கள் மூலம் இன்றிருக்கும் நடிகர்களுக்கு பென்ச்மார்க்காக செட் செய்து வைத்தவர் ரஜினிகாந்த். இன்னும் இந்த ரெக்கார்டுகளை முறியடிக்க தமிழ் சினிமா நடிகர்கள் போராடிக் கொண்டிருப்பது தனி கதை.

ரஜினியின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே தியேட்டர்களில், கட் அவுட், பாலபிஷேகம் பேண்டு வாத்தியங்கள், பட்டாசுகள் என ஒரு திருவிழாவாக மாறும். அதேபோன்று ரஜினிகாந்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடியதை விட, ரஜினியின் தோல்விகளை அவரது எதிரிகள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ரஜினி எப்போது வீழ்வார் என பல நடிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று வரை அந்த கனவு மெய்ப்படவில்லை என்பதே உண்மை. ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை தடுமாறும் போதும் ரசிகர்களின் பேரன்பினாலும், உற்சாகத்தாலும் தனது அடுத்த படத்தின் இமாலய வெற்றி மூலம் எதிரிகளுக்கு பதில் சொல்லும் பாணியை தற்போது வரை பின்பற்றி வருகிறார். 

ரஜினிகாந்த் தனது நடை, உடை, ஹேர் ஸ்டைல், மேனரிசம் என அனைத்திலுமே புது ஸ்டைலை புகுத்தி திரையில் ரசிகர்களை ஆர்பரிக்கச் செய்ததெல்லாம் வேற லெவல். அவர் திரையில் முடியை சிலுப்பி விட்டால்  ரசிகர்களின் கால்கள் தரையில் இருக்காது. அவர் உடுத்தும் ஒவ்வொரு உடையும் கையில் போடும் காப்பும், கழுத்தில் இருக்கும் ருத்ராட்சமும் பல ரசிகர்களின் அடையாளமாக மாறியது. 

அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் தமிழகத்தின் ஹாட் டாபிக்காக மாறியது. அவருடைய ஒவ்வொரு மேனரிசத்தையும் மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே 'சூப்பர் ஸ்டார்' என்னும் ரசிகர்களின் குரல் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எந்த நடிகரிடமும் காணாத ஏதோ ஒன்றை ரசிகர்கள் ரஜினியிடம் கண்டனர். அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கி கொண்டாடினர். இதயத்தில் இடம் கொடுத்து இன்பம் உற்றனர், அவரை சிம்மாசனத்தில் உட்கார வைத்து உற்சாகப்படுத்தினர்.

முதலில் வில்லன், அடுத்து குணச்சித்திர நடிகன், ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன் அப்புறம் சூப்பர் ஸ்டார் என தனது நடிப்புத்திறமையால் திரையுலகை ஆட்கொண்ட அசாத்திய மனிதன் இவர். 

"வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டுபோகல" என்று படையப்பா படத்தில் ஒரு வசனம் வரும், அதற்கேற்ப அவரின் வயது ஏற ஏற அவரின் இளமையும், எனெர்ஜியும், வசீகரமும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. திரைத்துறையில் ஏறக்குறை தன் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Night
Day