ஸ்டார் நடிகர்களுக்கு செக்... பின்வாங்க மறுக்கும் தயாரிப்பாளர் சங்கம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவும், தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதா அல்லது நிறுத்துவதா என்பது நடிகர்களின் கையில் தான் உள்ளது என அதிரடியாக அறிவித்துள்ளனர். பட வியாபாரத்தில் ஷேரிங் முறைக்கு நடிகர்கள் மாற வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்துவது குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

அண்மையில் நடிகர் தனுஷ் படத்திற்கு கட்டுப்பாடு, புதிய படங்கள் தொடங்குவது தற்காலிக நிறுத்தம், எட்டு வாரங்களுக்கு பிறகே ஓ.டி.டியில் திரைப்படங்களை வெளியிட வேண்டும் உட்பட சில முக்கிய முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உடனடியாக ஆலோசனை கூட்டத்தை நடத்திய தென்னிந்திய நடிகர் சங்கத்தினர், தங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் நடிகர் சங்கம் தெரிவித்த கண்டனம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி, ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாகவும், அதை நிறைவேற்றுவதில் தீர்க்கமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பை நடத்துவதும், நிறுத்துவதும் நடிகர்களின் கையில் தான் உள்ளது என தெரிவித்த அவர், நடிகர்களின் சம்பளத்தை குறைக்க சொல்லவில்லை மாறாக இந்தி, தெலுங்கு உட்பட மற்ற திரை துறையில் உள்ளது போல பட வியாபாரத்தில் ஷேரிங் முறைக்கு நடிகர்கள் மாற வேண்டும் என தான் கோரிக்கை வைப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி குறிப்பிட்டார். 

தமிழ் சினிமா துறையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர்தான் தொடர்ந்து நஷ்டத்தை சந்திப்பதாகவும், தீர்மானத்தில் குறிப்பிட்ட தேதிக்கு முன் நடிகர் சங்கத்துடனான பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எட்டினால் தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும் என கறாராக கூறினார்.

நடிகர் சங்கத்திடம் ஏற்கனவே தனுஷ் மீதான புகாரை தெரியப்படுத்தியுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் எழுத்துப்பூர்வமான புகார் மனுவை வெளியிடுவோம் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். 

ஐந்து நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு எடுத்து விட்டதாகவும், ஆனால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்ததாகவும், தற்போது அவர்கள் தரப்பில் எந்த பதிலும் இல்லாத காரணத்தால் வேறு வழியில்லாமல் ஒவ்வொருவர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தேனாண்டாள் முரளி குறிப்பிட்டார்.

இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதற்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day