கடை திறப்பு முதல் கான்சர்டுகள் வரை எங்கு பார்த்தாலும் கடந்த சில நாட்களாக ஒலித்த ஒரே முழக்கம் கடவுளே அஜித்தே... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மந்திரமாகவே மாறிய இந்த கோஷத்திற்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.. அவரது இந்த அறிக்கைக்கான பின்னணி குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
சாலையோர பரோட்டா கடையில் ஆரம்பித்த இந்த ட்ரெண்ட் தான்... தற்போது உலகளவில் ஒலிக்கும் கடவுளே அஜித்தே கோஷம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அஜித் குமார். பொதுவாக சினிமா துறையை சார்ந்தவர்கள் தங்களுக்கென பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்க வேண்டுமென எதிர்பார்பார்கள். ஆனால், அஜித்தோ அதற்கு நேர் எதிராக தான் உச்சத்தில் இருந்தபோதே தனது ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்களை கலைத்து ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்கினார். மேலும், தனது அல்டிமேட் ஸ்டார் பட்டத்தையும் துறந்தார்.
அஜித்தின் இந்த முடிவை ஏற்றுக் கொண்ட அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா துறையும், அவரை செல்லமாக தல, தல என்று தான் குறிப்பிட்டு அழைத்தனர். அதற்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரு அறிக்கையை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்குமார்.
தன்னை தல என அழைக்க வேண்டாம், பெயரை சொல்லியோ அல்லது ஏ.கே. என்றோ அழையுங்கள் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் அஜித் மீது அளவுகடந்த பிரியத்தை வைத்திருக்கும் அவரது ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதை நிறுத்தவில்லை.
அப்படிதான் கடந்த சில மாதங்களாக பள்ளி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் என எங்கு பார்த்தாலும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் எதிரொலித்தது.
இது தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களிலும், ஏன் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கூட எதிரொலித்தது. பட்டித்தொட்டி எங்கும் கடவுளே அஜித்தே என்ற கோஷம் ஒலிக்க தொடங்கிய நிலையில், வெளிநாட்டவர்களும் கடவுளே அஜித்தே என்ற கோஷத்திற்கு வைப் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். அந்த, வீடியோக்களும் இணையத்தில் இறக்கை கட்டி பறந்தன.
இதற்கு இல்லையா சார் எண்டு.. என எதிர்பார்த்திருந்த நிலையில், திரைப்படம் மற்றும் ரேஸ் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு தமிழகம் வந்த அஜித்குமார் காதுக்கு விஷயம் செல்ல, ஓ மை காட் என்பதுபோல் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'கடவுளே அஜித்தே' என்ற இந்த கோஷம் தன்னை கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது பெயரை தவிர்த்து தன் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் துளியும் உடன்படவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார். தனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்கப்பட வேண்டும் என விரும்புவதாக கறாராக அறிக்கையில் தெரிவித்துள்ளார் அஜித்குமார்.
மேலும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசெளகர்யத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பை வேண்டுவதாகவும், தன்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புவதாகவும் கூறி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் அஜித்குமார்.
அந்த அறிக்கையில், யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் என்றும், சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள் என்றும் வேண்டுகொள் விடுத்திருப்பதுதான் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கடைசியாக தனது பாணியில் வாழு, வாழ விடு என்ற தனது தாரக மந்திரத்துடன் அறிக்கையை முடித்துள்ள அஜித்குமார், கடவுளே அஜித்தே என்ற கோஷத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்துள்ளார். ஆனால், அஜித் மேல் அளவுக்கடந்த பாசத்தை வைத்திருக்கும் ரசிகர் பட்டாளங்கள், அடுத்து என்ன கோஷத்தை எழுப்பி டிரெண்ட் செய்ய உள்ளனர் என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.