எழுத்தின் அளவு: அ+ அ- அ
97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை அள்ளிச் சென்றது. எந்தெந்த படங்களுக்கு எந்தெந்த பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காணலாம்....
திரைத் துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 2024ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப் படைப்புகளுக்கும் அத்திரைப்படங்களில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய திரை கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி ரொமான்ஸ் நகைச்சுவைப் படமான அனோரோ என்ற திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான அனோரா திரைப்படத்தை எழுதி இயக்கிய சீன் பேக்கரே இத்திரைப்படத்தின் படத்தொகுப்பையும் செய்திருந்தார். மைக்கி மேடிசன், மார்க் எடெல்ஷ்டீன், யூரா போரிசோவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில நடித்திருந்த அனோரோ திரைப்படம், பெண் பாலியல் தொழிலாளிக்கும் பணக்கார இளைஞருக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்த மைக்கி மேடிசனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அனோரா திரைப்படத்தை இயக்கிய சீன் பேக்கரும் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த திரைக்கதை என 4 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அதிக ஆஸ்கர் வென்ற தனிநபர் என்ற வால்ட் டிஸ்னியின் சாதனையை சீன் பேக்கர் சமன் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எபிக் பீரியட் ட்ராமாவாக வெளிவந்த தான் தி புருட்டலிஸ்ட் திரைப்படத்தில் நாயகனாக நடித்த ஆட்ரியன் ப்ராடி சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த நடிகருக்கான விருது வென்ற ஆட்ரியன் ப்ராடி 23 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான விருதை வென்று அசத்தியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் லால் க்ராளி சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதையும், இப்படத்தின் இசையமைப்பாளர் டேனியல் பிளம்பெர்க் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்று அசத்தியுள்ளனர்.
சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை கடந்த ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற எல் மால் பாடலுக்காக வழங்கப்பட்டது.
இதே படத்தில் நடித்த ஜூ சால்ட்டனா சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதினை, எ ரியல் பெயின் படத்தில் நடித்ததற்காக கீரன் கல்கின் வென்றார்.
அதே போல சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதினை கான்கிளேவ் திரைப்படத்திற்காக பீட்டர் ஸ்ட்ராகன் வென்றார்.
இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வால்டர் சால்லெஸ் இயக்கிய ஐ அம் ஸ்டில் ஹியர் ( I'm still here) என்ற பிரேசில் நாட்டை சேர்ந்த திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.
அதே போல சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை ஃப்ளோ ( Flow) திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த சௌண்ட் டிசைனுக்கான ஆஸ்கர் விருதை டெனிஸ் வில்னுவ் இயக்கிய டியூன் பார்ட் 2 திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது விக்கெட் திரைப்படத்திற்கும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது நோ அதர் லேண்ட் திரைப்படத்திற்கும் சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது தி சப்ஸ்டன்ஸ் திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டன.
சிறந்த ஆவணக் குறும்படமாக ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா படமும் சிறந்த அனிமேஷன் குறும்படமாக இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ் படமும் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படமாக ஐ ஆம் நாட் ஏ ரோபோ படமும் தேர்வு செய்யப்பட்டன