எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுகவினர் ஏற்படுத்திய குளறுபடியால் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பாரம்பரியமான ஜல்லிகட்டை சீர்குலைக்கும் முயற்சியில் விளம்பர திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக, மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஏறுதழுவுதல் அரங்கம் எனும் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் பிப்ரவரி 15ம் தேதி முதல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை, ஒவ்வொரு மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, மார்ச் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணி முதல் தொடங்கியது. டோக்கன் பெற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், ஜல்லிக்கட்டு போட்டி 3 மணிக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. போலி டோக்கன் அடித்து உள்ளூர் திமுகவினர் தங்களது மாடுகளை அவிழ்த்து விடுவதாகவும், அசல் டோக்கன் வைத்திருந்த 300-க்கும் மேற்பட்டோர் தங்களுடையை மாடுகளை வாடிவாசலில் அவிழ்த்து விட முடியாமல் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.
முக்கியமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க திருச்சி, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாட்டின் உரிமையாளர்கள், சுமார் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சனிக்கிழமை இரவு முதல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகளுடன் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் மத்தியில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க திமுகவினரின் ஜல்லிக்கட்டாகவே நடத்தப்படுவதாக மாட்டின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். பெயருக்கு வெளி மாவட்ட காளைகளுக்கு டோக்கனை வழங்கிவிட்டு உள்ளூர் திமுகவினரின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். திமுகவினருக்கு ஆதரவாகவே அரசு அதிகாரிகளும் நடந்துக் கொள்வதாக மாட்டின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆயிரம் காளைகள் அவிழ்த்துவிட வேண்டிய மாவட்ட நிர்வாகம், 700 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிட்டதாக கூறுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 500-க்கும் குறைவான காளைகளே அவிழ்த்துவிடப்பட்டன. அதனால், முறைகேடாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேரடியாக டோக்கன்கள் வழங்கி நேர்மையாக நடத்த வேண்டும் என்று காளை மாட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது ஜல்லிக்கட்டு போட்டிகளின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்தவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்திலும் நேரடியாக டோக்கன்கள் வழங்கி, ஜல்லிக்கட்டு நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.