எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுகவின் தேசிய விரோத, மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அவர், வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். தமிழ் சொந்தங்களுக்கு சிவராத்திரி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்ட அவர், உலகில் மிக தூய்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தம் அளிப்பதாகவும், அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அமித்ஷா குறிப்பிட்டார். திமுகவின் தேசிய விரோதம்,மக்கள் விரோதம் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரும் காலம் வந்து விட்டது என்று குறிப்பிட்ட அமித்ஷா, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சட்ட ஒழுங்கு மிக கேவலமாக உள்ளதாக தெரிவித்தார். பள்ளி கல்லூரிகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் செல்ல முடியாத சூழலாக உள்ளது என வேதனை தெரிவித்தார். ஊழலில் மாஸ்டர் டிகிரி பெற்றவர்கள் திமுகவினர் என்றும், நிலக்கரி கொள்ளை, கனிமவள கொள்ளை,மணல் கொள்ளை,2-ஜி ஊழலை இன்னும் மறக்க முடியவில்லை என்று அமித்ஷா குறிப்பிட்டார். தமிழகத்தில் மறுசீரமைப்பை பொறுத்தவரை மக்களவை தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாது என்று அமித்ஷா உறுதி தெரிவித்தார்.