எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே டாஸ்மாக் மதுபான பார் விவகாரத்தில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த திமுக கவுன்சிலரும் மாமூல் தர மறுத்த திமுக உடன்பிறப்பும் மோதலில் ஈடுபட்டனர். காயம் என மருத்துவமனைக்குச் சென்ற இரு தரப்பும், அங்கும் தாக்குதலில் இறங்கிய சம்பவம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.....
ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், அரசு அனுமதி பெற்ற பார் நடத்தி வருகிறார். இவர் திமுக நிர்வாகியாகவும் உள்ளார். இந்த நிலையில் ராசிபுரம் 24 வது வார்டு திமுக கவுன்சிலரான கலைமணியின் மகன் லோகசரவணன் என்பவர் பார் உரிமையாளரிடம் அடிக்கடி மாமூல் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பார் உரிமையாளர் ராஜாவிற்கும், திமுக கவுன்சிலர் மகனுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு இருந்து வந்துள்ள நிலையில் புதன் கிழமை அது முற்றியுள்ளது. அதனால் கவுன்சிலர் கலைமணி வீட்டிற்குச் சென்ற ராஜா மற்றும் பார் ஊழியர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரு தரப்பினரும் தடுத்து நிறுத்தினர். மோதலில் காயமடைந்தவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சையில் இருந்த 3 பேரை கவுன்சிலர் கலைமணி மகன் லோகசரவணன் மருத்துவமனையில் வைத்தே தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கவுன்சிலர் மகன் லோக சரவணன் தனக்கு பணம் தர வேண்டும் என்றும் அதைக் கேட்கச் சென்றபோது தன்னை அடித்ததாக ராஜாவும், தனது மகனைத் தேடி வீட்டிற்கு வந்த ராஜா மற்றும் பார் ஊழியர்கள் தன்னையும் மற்றொரு மகனையும் தாக்கியதாக கலைமணியும் புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரிடமும் புகாரை பெற்றுக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர். அந்தவகையில் திமுக நிர்வாகி ராஜாவின் பாரிலும் அதுபோல் விற்பனை நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில்தான் கவுன்சிலர் மகன் லோகசரவணன் மாமூல் கேட்டதாகவும், நானும் திமுகதான் எனக் கூறி ராஜா கொடுக்க மறுத்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மாமூல் பிரச்னையில் திமுகவினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் மகன் லோக சரவணன், பார் உரிமையாளர் ராஜா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.