எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு பெற்று தருவேன் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்ற பிரதமர் மோடி, அங்கு 500 மெகாவாட் திறன்கொண்ட ஈனுலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் திரும்பிய பிரதமர், அங்கிருந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சாலை மார்க்கமாக சென்றார். நந்தனம் மைதானத்திற்கு சென்ற மோடிக்கு அங்கிருந்த பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வணக்கம் சென்னை என தமிழில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தாம் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருவதாக குறிப்பிட்டார். மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்ததாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,
திமுகவுக்கு குடும்பம்தான் முக்கியம் என்றும், ஆனால் பாஜகவுக்கு மக்கள் மீதே அக்கறை உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மேலும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையோடு போதைப்பொருள் எங்கும் நிறைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.