"நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-


மத்திய அரசு, தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். திமுக விளம்பர அரசு, இனிமேலும் மக்களை ஏமாற்றாமல், இளம் சமுதாயத்தினரின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தேசிய தேர்வு முகைமையால் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கல்வி சேர்க்கை நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நீட் தேர்வு நடத்துவதில் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு குளறுபடி நடந்தவண்ணம் இருப்பது மிகவும் வேதனை அளிக்‍கிறது - இது மருத்துவ கல்வியை படிக்க விரும்பும் மாணவச் செல்வங்களின் வாழ்நாள் கனவை முற்றிலும் தகர்த்துவிட்டது - ஒரு வெளிப்படைத்தன்மை இல்லாமல் நடைபெறும் இது போன்ற போட்டி தேர்வுகளால் இளம் சமுதாயத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது - இதனை கருத்தில் கொண்டுதான் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என கோரிக்கை வைக்கிறோம் - புரட்சித்தலைவி அம்மாவும் தனது உயிர்மூச்சு உள்ளவரை தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை - எனவே, நம் இளம் சமுதாயத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான சட்ட வழிமுறைகளை விரைந்து ஏற்படுத்திட வேண்டும் என மத்திய, மாநில  அரசுகளைக் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி தேசிய தேர்வு முகைமையால் நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட்டன - கடந்த 2023ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 2 மாணவர்கள் மட்டுமே முதலிடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67 பேர் என தரவரிசை பட்டியலில் வெளியானது - அதிலும் குறிப்பாக முழு மதிப்பெண்களை பெற்ற 67 மாணவர்களில் 6 மாணவர்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது தெரிய வந்ததால் பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான வினாக்களுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படுவதும், தவறான பதில்களுக்கு 5 மதிப்பெண்கள் குறைக்கப்படுவதும் நடைமுறையில் இருந்துவருகிறது - ஆனால் தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது - ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும் - தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும் - ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற சர்ச்சை வெடித்தது - இதற்கு தேசிய தேர்வு முகைமையானது ஒரு விளக்கத்தை அளித்திருந்தது - அதில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1,563 மாணவர்களுக்கு தேர்வு எழுத குறைவான நேரம் வழங்கப்பட்டதாகவும், அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தது - இது போன்ற ஒரு நடைமுறையை எந்த ஆண்டும் கடைபிடித்தது இல்லை என்று நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவிக்கின்றனர் - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் ஏற்கனவே பெரும் சர்ச்சையான நிலையில், நீட் தேர்வு முடிவுகளும் ஏகப்பட்ட குளறுபடிகளை கொண்டுள்ளதால் பெரும் கனவுகளோடு நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் - நீட் தேர்வு முடிவுகளின்படி மருத்துவ கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், 2024 நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய தேர்வை நடத்த வேண்டும் எனவும் தேசிய அளவில் மாணவர்கள் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்‍காட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த குளறுபடிகளை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில், இன்றைக்கு உச்சநீதிமன்றம், கருணை மதிப்பெண்கள் பெற்ற 1563 நபர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது - அவ்வாறு கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட மாணவர்களில், விருப்பப்படுபவர்களுக்கு வேண்டுமானால் மறு தேர்வு நடத்தலாம் என்றும் உத்தரவு அளித்துள்ளது - இதன்மூலம் நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது -

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - தமிழகத்தில் தற்போது 38 அரசு மருத்துவ கல்லூரிகளும், 36 தனியார் மருத்துவ கல்லூரிகளும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன - இதில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் அஇஅதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டன - இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தமாக 5 ஆயிரத்து 100 மருத்துவ இடங்கள் இருக்கின்றன - இந்தியாவிலேயே அதிக மருத்துவ இடங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - இந்நிலையில் நீட் தேர்வின் அடிப்படையில் குறைந்த அளவிலான மாணவர்கள்தான் தமிழகத்தில் இருந்து தேர்வாக முடிகிறது - இதற்கு நம் மாணவர்களை குறைத்து மதிப்பிடமுடியாது - இன்றைக்கு தமிழகத்திலிருந்து எண்ணற்ற மாணவர்கள் நமது நாட்டிலும், வெளி நாடுகளிலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என, புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நம் மாணவச்செல்வங்கள் பள்ளிப்படிப்பில் கவனம் செலுத்தி எவ்வளவோ சிரமப்பட்டு சிறந்த மதிப்பெண்களை பெற்று வெற்றிபெற்று இருந்தாலும், நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் - நீட் தேர்வில் குறைந்தது 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இருந்தால் தான் அரசு கல்லூரிகளில் மருத்துவ கல்விக்கு இடம் பெறுவதற்கு முயற்சியாவது செய்ய முடியும் என்கிற நிலை இருக்கிறது -

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்குதான் முயற்சி மேற்கொள்ளமுடியும் - தனியார் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி படித்து முடிக்க வேண்டுமென்றால் கல்லூரி கட்டணமாக குறைந்தது 1 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு செலவு ஆவதாக தெரியவருகிறது - எனவே நீட் தேர்வில் வெற்றி பெற தேவையான மதிப்பெண் பெற்று இருந்தாலும் பொருளாதார வசதி படைத்தவர்களால் மட்டுமே தனியார் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவ கல்வி பெற முடியும் - ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஏழை, எளிய, சாமானிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என்னதான் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்று இருந்தாலும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் போய்விடுகிறது - பொருளாதார வசதியில்லாத காரணத்தால் நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான சிறப்பு பயிற்சிகளையும் பெற முடிவதில்லை என சொல்லி வேதனைப்படுகிறார்கள் - இதன் காரணமாக  மருத்துவ கல்வி என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது - நீட் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்களால், தமிழகத்தில் இதுவரை 16 மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் - இதன் அடிப்படையில்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற கோரிக்கை எழுகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இளம் சமுதாயத்தினரின் மருத்துவ கனவு அழிவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர்தான் என்பது நாடறிந்த உண்மை - நீட் தேர்வை முதன் முதலில் கொண்டு வர காரமணமாக இருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் - திமுகவும் அன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் அங்கம் வகித்தது - ஆனால், இன்றைக்கு இருவருமே சேர்ந்துகொண்டு நீட்டுக்கு எதிராக பேசுவதையும், போராடுவதையும் பார்க்கும்போது "பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும்" கதையாக இருக்கிறது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை - தமிழகத்தில் நீட் தேர்வு நுழைந்துவிடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார் - அம்மா இன்று நம்மோடு இருந்திருந்தால் நீட் தேர்வு தனது காலடியை தமிழகத்தில் பதித்து இருக்காது - ஆனால் திமுகவினர் தேர்தலின்போது என்ன வாக்குறுதி கொடுத்தார்கள்? -ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் யுக்தி தங்களிடம் உள்ளதாக பொய் மூட்டைகளை தேர்தல் நேரத்தில் அவிழ்த்துவிட்டு அப்பாவி மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நம்பவைத்து ஏமாற்றியதுதான் மிச்சம் - திமுகவினர் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு பெறுவது என்பதை வெறும் அரசியலாகத்தான் பார்க்கின்றனர் - இப்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்காவது ஆண்டில் இருக்கிறது - என்ன பயன்? திமுகவினர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் இன்றைக்கு மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மருத்துவத் துறை என்பது நோயாளிகளின் உயிர் சம்பந்தப்பட்டது - ஒரு நோயாளி தனக்குள்ள பிரச்னைகளை பற்றி என்ன சொல்ல வருகிறார் என்பதை மருத்துவர் நன்றாக புரிந்துகொண்டால்தான் அவருக்கு சரியான மருத்துவத்தை அளிக்கமுடியும் - அந்தந்த மாநில மொழி தெரிந்த மருத்துவர்களால்தான் அவர்கள் மாநிலத்தில் தன்னை சந்திக்க வரும் நோயாளிகளின் பிரச்னையை நன்றாக புரிந்துகொண்டு அவர்களுக்கு சரியான மருத்துவத்தை அளிக்கமுடியும் - அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து அரசுப் பணிகளை ஏற்பவர்கள் இரண்டு வருட காலம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிடவேண்டும் என்ற நடைமுறை புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது - அவ்வாறு கிராமப்புறங்களில் பணியாற்றுகின்ற மருத்துவர்கள் தமிழ் மொழி தெரிந்தவர்களாக இருந்தால்தான், படிப்பறிவு பெற இயலாத கிராமப்புறங்களில் இருந்து வருகின்ற நோயாளிகளின் பிரச்னைகளை சரியாக புரிந்துக்கொண்டு மருத்துவம் அளித்து அந்த நோயாளிகளின் உயிரை காப்பாற்றிடமுடியும் -

ஆனால், நீட் தேர்வில் வெற்றி பெறமுடியாமல் தமிழக மாணவர்களின் மருத்துவ வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டு போகும்போது, வரும்காலங்களில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் - அந்த மருத்துவர்களும், படிப்பு முடிந்தவுடன் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியவர்கள் போக மீதம் இருப்பவர்கள்தான், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்ற சூழ்நிலை ஏற்படும் - அதுபோன்ற நிலையில், வருகின்ற நோயாளிகள் தங்களுடைய பிரச்னைகளை தமிழ் மொழியில் மருத்துவரிடம் விவரிக்கும்போது, அதனை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் மருத்துவம் அளிப்பது, எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசியல் தலைவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் - கடவுளாக கருதும் நீதியரசர்களும் நீட் தேர்வால் ஏற்படும் பாதகங்களை எண்ணிப்பார்க்கவேண்டும் - ஆகவே, இன்னும் பத்து ஆண்டுகள் இதே போன்ற நிலை தொடர்ந்தால், அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களே இல்லாமல் அவர்களை தேடி அலைகின்ற அவல நிலை ஏற்படக்கூடும் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ கல்வியை தமிழகத்திலிருந்து படித்து முடித்து எத்தனையோ மருத்துவர்கள்  இன்றைக்கு மருத்துவத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறார்கள் - துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்திலிருந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு சென்னையிலேயே ஒரு சிறந்த இதயநோய் மருத்துவராக சேவையாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று மீனவ குடும்பத்தில் பிறந்து வந்து நன்றாக படித்து இன்றைக்கு இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணராக சென்னையிலேயே பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் - இவரிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு இன்றைக்கு வெளிநாடுகளிலிருந்தெல்லாம் நோயாளிகள் வந்து காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் - இவர்களெல்லாம் யாருமே நீட் தேர்வு படித்து மருத்துவர் ஆனவர்கள் இல்லை - எனவே ஆட்சியாளர்கள் நீட் தேர்வினால் ஏற்படும் பாதகங்களை அறிவார்ந்த வகையில் நன்றாக ஆராய்ந்து இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் -

மத்திய அரசு தமிழகத்தில் உள்ள இளம் சமுதாயத்தினரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் - திமுக தலைமையிலான விளம்பர அரசு இனிமேலும் மக்களை ஏமாற்றாமல், இளம் சமுதாயத்தினரின் வாழ்க்கையில் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள்தொகைக்கேற்ப மாநில மொழி பேசும் மருத்துவர்கள் இருந்தால்தான் மக்கள் சுகாதாரத்தோடு வாழுகின்ற நிலையை அடையமுடியும் என்ற உண்மையை உணர்ந்து, ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day