"மக்கள் ஆதரவைக் கண்டு திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது" - சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுகவும், காங்கிரஸும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என விமர்சித்துள்ள பிரதமர் மோடி, இரு கட்சிகளிலும் வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்ட தேச விரோத செயல்கள் நிறைந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பாஜகவின் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக திறந்த வெளி வாகனத்தில் விழா மேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கோவையில் தமிழக மக்கள் தனக்கு கொடுத்த ஆதரவை பார்த்து திமுகவினருக்கு தூக்கமே தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் அதனை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும், திமுக, காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை  அவமதித்துக் கொண்டே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்து மதத்தை தாக்கும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேறு மதம் குறித்து பேசுவதே இல்லை என்றும் காட்டமாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என பெருமிதம் தெரிவித்தார். தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்வதே தனது கடமை எனவும்  கூறினார். மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி என சக்திகள் நிறைந்த பூமி தமிழ்நாடு என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, வரும் மக்களவை தேர்தலில் சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு அழிவை தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.


Night
Day