எழுத்தின் அளவு: அ+ அ- அ
கருணையின் வடிவமாய் விளங்கிய, இயேசுபிரான் அவதரித்த திருநாளான, கிறிஸ்துமஸ் திருநாளில் அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தனது, கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியில், கருணையே வடிவான கர்த்தராகிய இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உன் மீது நீ அன்பு செலுத்துவது போல அடுத்தவர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்று எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த தினத்தை, கிறிஸ்தவ பெருமக்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமஸ் மரம் அமைத்து, அதனை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து வாசலில் நட்சத்திரங்களைக் கட்டி, வீட்டினை அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டு விருந்தினர்களுடன் இனிய உணவு உண்டு, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் -
"இன்னலுறும் மனிதர்களுக்கு நீங்கள் செய்கின்ற உதவியெல்லாம் ஆண்டவனுக்கு செய்யும் உதவியாகும்" என்ற இயேசுபிரானின் அறிவுரைக்கு ஏற்ப, ஆதரவற்றோர்களை அரவணைத்திட வேண்டும் - "மனித வாழ்க்கையில் நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால் இந்த உலகில் முடியாதது எதுவும் இல்லை" என்ற இயேசுபிரானின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
நம் புரட்சித்தலைவி அம்மாதான், இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்பதை இந்நன்னாளில் எண்ணி பெருமிதம் அடைவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அனைவரிடத்தும் அன்பு காட்டி, கருணையின் வடிவமாய் விளங்கிய இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய குணங்களை மக்கள் அனைவரும் பின்பற்றி, சகோதரத்துவத்துடன், ஒற்றுமையாக வாழவேண்டும் எனக்கூறி கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.