எழுத்தின் அளவு: அ+ அ- அ
முதலமைச்சர் நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து இரவோடு இரவாக அழைத்து வரப்பட்ட அரசு பேருந்துகள், சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க, நள்ளிரவில் கிராமங்களுக்கு இடையே குறுகலான சாலைகளில் இயக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்துகள் முறைகேடாக இயக்கப்பட்டதா என விசாரணை நடத்த கோரிக்கை வலுத்துள்ளது குறித்து தற்போது காணலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களை அழைத்து வருவதற்காக, மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், மதுரையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டன.
அரசு பேருந்துகள் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய நிலையில், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல் செல்வதற்காக மாற்றுப்பாதையில் இரவோடு இரவாக திருப்பி விடப்பட்டன.
நல்லூர் கிராமப் பகுதிகளில் உள்ள மாற்றுபாதையில் நள்ளிரவில் நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டதால், குறுகலான தெருக்களில் செல்ல முடியாமல் சிக்கி தவித்தன.
நள்ளிரவில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கிராம பகுதிகள் வழியாக சென்றதால் அதிகளவிலான ஒலி எழுந்து பொதுமக்கள் உறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
அரசு நிகழ்ச்சிக்கு முறையாக அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் பிரதான சாலை வழியாக சுங்கக் கட்டணம் செலுத்தி சென்றிருக்கும். ஆனால் எதற்காக இரவோடு இரவாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சுங்கச்சாவடியை கடந்து செல்லாமல், மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டது என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதுபோன்ற நூற்றுக்கு மேற்பட்ட அரசு பேருந்துகள் கணக்கு காட்டாமல், முறைகேடாக அரசு விழாவிற்கு அழைத்து செல்லப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு விழாவிற்கு அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படும் போது அதற்கான உரிய கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆனால் கட்டணம் செலுத்தப்படாமல் அரசு பேருந்துகள் வரவழைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், சுங்கக் கட்டணம் ஆதாரமாக ஆகிவிடும் என்பதற்காக மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண விவகாரம் நாள்தோறும் பூதாகரமாகி வரும் நிலையில், அரசு பேருந்துகள் கப்பலூர் சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்கும் விதமாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.