அஇஅதிமுக ஆண்டு விழா - அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாட, கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, அவரவர் இருக்கும் இடங்களிலேயே கழக ஆண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடுமாறு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ​அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 53-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வருகின்ற 17-10-2024 வியாழக்கிழமை அன்று பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, ஏழை, எளிய, நலிவுற்ற மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் கொண்டாடுவது நமது வழக்கமாக கடைபிடித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல இடங்களில், வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும், சென்னைக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, அவரவர் இருக்கும் இடங்களிலேயே கழக ஆண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த இயக்கம் புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டதே, ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகத்தான் என்பதை எந்நாளும் மனதில் வைத்து செயல்படும் நமது கழகத்தொண்டர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுமாறு புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தியுள்ளார்.

Night
Day