எழுத்தின் அளவு: அ+ அ- அ
10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அங்கீகாரம் பெறாத தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியால் 19 மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதிராம்பட்டினத்தில் உள்ள prime public சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் 19 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை தற்போது வரை பள்ளி நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதால், தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ அங்கீகாரமே இல்லாமல் பள்ளி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியாது என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவர்களின் கல்வியோடு விளையாடிய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நாளை தேர்வு எழுத வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளதால் 19 மாணவர்களின் ஓராண்டு காலம் வீணாகி உள்ளது. இனி அடுத்த கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் தான் தேர்வு எழுத முடியும் என தகவல் வெளியாகி உள்ளதால் பள்ளியில் படிக்கும் 500க்கும் மேற்பட்ட மற்ற மாணவ, மாணவியர்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும், 8-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடத்துவதற்கு தற்போது தான் பள்ளி நிர்வாகம் அனுமதி பெற விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்தாண்டு இந்த பள்ளியில் படித்த 12-க்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு போலியான தேர்வு நடத்தியுள்ளதாகவும், அவர்களுக்கும் இதுவரை சான்றிதழ் கிடைக்காமலேயே அவர்கள் பதினோராம் வகுப்பு பயின்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.